மாநில நிர்வாகிகள் பதவிக்கு தமிழக பா.ஜ.,வில் கடும் போட்டி
மாநில நிர்வாகிகள் பதவிக்கு தமிழக பா.ஜ.,வில் கடும் போட்டி
ADDED : நவ 10, 2024 01:23 AM

தமிழக பா.ஜ., மாநில நிர்வாகிகள் பதவிக்கு, கடும் போட்டி உருவாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது என, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலர்கள், செயலர்கள் என, 44 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார்.
அக்கறை காட்டவில்லை
இந்த பட்டியலில், மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களும், தமிழக பா.ஜ.,வில் நீண்ட காலமாக பணியாற்றியவர்களும் இடம் பெற்றனர்.
நிர்வாகிகள் அனைவரும் திறம்பட பணியாற்றுவர் எனக் கருதிய நிலையில், அவர்கள் லோக்சபா தேர்தலில் பணப் பட்டுவாடாவுக்கு தான் முக்கியத்துவம் அளித்தனர்.
வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதிலும், கட்சியின் ஓட்டு வங்கியை பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டவில்லை என புகார் எழுந்தது.
இந்த சூழ்நிலையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியில், 50 லட்சம் உறுப்பினர் என்ற இலக்கும் முழுமை பெறவில்லை.
எனவே, உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம், வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தாயகம் திரும்புகிறார்.
அவர் சென்னை வந்ததும், கிளை, மண்டல், மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது.
மாநில நிர்வாகிகள், நியமனம் வாயிலாக அறிவிக்கப்படுவர் என்பதால், பதவிகளை கைப்பற்ற, தற்போதைய நிர்வாகிகள், பழைய நிர்வாகிகள், அண்ணாமலை தலைவரான பின் கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கடும் போட்டி உருவாகி உள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக பா.ஜ.,வில், பொதுச்செயலர் பதவி முக்கியமானது. துணைத் தலைவர், பொதுச் செயலர் பதவிகளில், இரண்டு முறை இருந்தவர்களுக்கு மீண்டும் அதே பதவி வழங்க வாய்ப்பு இல்லை.
தற்போது உள்ள, 11 துணைத் தலைவர்களில் கரு.நாகராஜ், கனகசபாபதி போன்றவர்கள் பொதுச்செயலர் பதவியை எதிர்பார்க்கின்றனர்.
மாற்றப்படும் வாய்ப்பு
மாநிலச் செயலர்கள், 11 பேர் உள்ளனர். அப்பதவியில் உள்ள சிலர், தேர்தல் பணிகளை சரிவர செய்யவில்லை. எனவே, அவர்களில் சிலரை மாற்றவும் வாய்ப்பு உள்ளது.
பொதுச்செயலர்கள் ஐந்து பேரில் சிலர் மாற்றப்பட்டால், அப்பதவியை மாநிலச் செயலர்கள் வினோஜ் செல்வம், நடிகர் சரத்குமார், விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி போன்றோர் எதிர்பார்க்கின்றனர்.
இளைஞர் அணி, மகளிர் அணி, சிறுபான்மையினர் அணி உள்ளிட்ட நிர்வாகிகளும் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் -.