கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல 'ரோப்கார்' சுற்றுலா துறை அமைச்சர் தகவல்
கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல 'ரோப்கார்' சுற்றுலா துறை அமைச்சர் தகவல்
ADDED : ஏப் 23, 2025 12:33 AM
சென்னை:''சாத்தியக் கூறுகள் இருந்தால், கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல, 'ரோப்கார்' அமைக்கப்படும்,'' என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க.,- பொன்னுசாமி: நாமக்கல் கொல்லி மலைக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில், 150 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. அதில் குளிக்க, 1,200 படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டியுள்ளது. அங்கு சுற்றுலா பயணியர் குளிக்கச் செல்வதற்கு, ரோப்கார் வசதி செய்து தர வேண்டும்.
அமைச்சர் ராஜேந்திரன்: சுற்றுலா தளங்களை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த, முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார். ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த, 'டோபுள் மேயர்' என்ற நிறுவனம் ரோப்கார் வசதி ஏற்படுத்தத் தயாராக இருக்கிறது. சாத்தியக் கூறுகள் இருந்தால் அங்கு ரோப்கார் திட்டம் நிறைவேற்றப்படும்.
பா.ஜ., - சரஸ்வதி: மொடக்குறிச்சி கனகமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. அங்கு கிரிவலம் செல்லும் பாதை கரடுமுரடான, மண் சாலையாக உள்ளது. கோவிலுக்கு செல்லும் சாலையை தார்சாலையாக மேம்படுத்த, 49 லட்சம் ரூபாய்க்கும், கிரிவலப்பாதை அமைக்க, 99 லட்சம் ரூபாய்க்கும், ஊராட்சி ஒன்றியம் வாயிலாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, சுற்றுலா துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலைகளை அமைத்துத் தர வேண்டும்.
அமைச்சர் ராஜேந்திரன்: இப்பணிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை வாயிலாக மேற்கொள்ள வாய்ப்புள்ளது. துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால், அவர் அதை பரிசீலிப்பார்.
தி.மு.க., - அன்பழகன்: கும்பகோணம் மகாமகம் குளத்தில், 1989ம் ஆண்டு படகு சவாரி துவக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அத்திட்டம் நிறுத்தப்பட்டது. மக்களின் பொழுதுபோக்கிற்காக, மீண்டும் மகாமகம் குளத்தில் படகு குழாம் அமைத்துத் தர வேண்டும்.
அமைச்சர் ராஜேந்திரன்: சுற்றுலாத்துறை அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்து, நிதி நிலைக்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

