இடுக்கி அணை காண நாளை முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி
இடுக்கி அணை காண நாளை முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி
ADDED : ஆக 31, 2025 07:07 AM

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி அணையை காண சுற்றுலாப்பயணிகளுக்கு நாளை முதல் செப்., 30 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணை பலத்த பாதுகாப்பு வளையத்தில் மின்வாரியத்தினரின் பராமரிப்பில் உள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கோடை சீசன் நாட்களில் மட்டும் அணையை காண சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர். அணையில் பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் ஒன்று முதல் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
அனுமதி: கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் செப்.,5ல் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இடுக்கி அணையை காண நாளை (செப்.,1) முதல் செப்., 30 வரை பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வாரம் தோறும் பராமரிப்பு நடக்கும் புதன் கிழமை மற்றும் மழை முன்னெச்சரிக்கை ஆகிய நாட்களில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும்.
பாதுகாப்பு கருதி அணையில் நடந்து செல்ல அனுமதி இல்லை என்பதால் மின்வாரியம் சார்பிலான பேட்டரி கார்களில் செல்லலாம். அதற்கு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.100.
அணைக்கு செல்ல www.keralahydeltourism.com என்ற இணைய தளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவை பொறுத்து நேரடியாக நுழைவு சீட்டு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

