துாவானம் நீர்வீழ்ச்சிக்கு 'டிரக்கிங்' சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்
துாவானம் நீர்வீழ்ச்சிக்கு 'டிரக்கிங்' சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்
ADDED : ஜன 27, 2025 04:06 AM

மூணாறு: கேரள மாநிலம் மறையூர் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள துாவானம் நீர்வீழ்ச்சிக்கு 'டிரக்கிங்' செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மூணாறைச் சுற்றியுள்ள பல நீர்வீழ்ச்சிகள் மழைக்காலங்களில் மட்டும் உயிர் பெறும். மழை முடிந்ததும் வறண்ட பாறைகள் மட்டும் காணப்படும். ஆனால் கேரளாவில் மூன்று ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்கின்றன. இதில் இரவிகுளம் தேசிய பூங்காவில் உருவாகி பாய்ந்து ஓடி அமராவதி அணையில் கலக்கும் பாம்பாற்றில் மறையூர் அருகே காணப்படும் 'துாவானம்' நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். கோடையில் மட்டும் நீர்வரத்து சற்று குறைந்து விடும். சுற்றிலும் வனத்தால் சூழப்பட்டு ரம்யமாக காணப்படும் நீர்வீழ்ச்சியை மறையூர் அருகே உடுமலைபேட்டை செல்லும்  ரோட்டில் இருந்து ரசிக்கலாம்.
'டிரக்கிங்'
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அத்துறை சார்பில் 'டிரக்கிங்' (மலையேற்றம்) அழைத்துச் செல்லப்படுகின்றனர். மறையூரில் இருந்து நீர்வீழ்ச்சி வரையிலான 3 கி.மீ. துாரம் 'டிரக்கிங்' செல்ல நபர் ஒன்றுக்கு ரூ.300 கட்டணம் வசூக்கப்படுகிறது. வனம், கரடு முரடான பாதை என மாறுபட்ட சூழலில் 'டிரக்கிங்' செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

