ADDED : ஜன 01, 2024 06:36 AM

கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நகரில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நகரில் நேற்று காலை முதல் ஏராளமான வாகனங்கள் முகாமிட துவங்கின.
வெள்ளி நீர் வீழ்ச்சியில் துவங்கிய போக்குவரத்து நெரிசல் நகர் பகுதியை முழுமையாக ஸ்தம்பிக்க செய்தது. முக்கிய சுற்றுலா தலங்களில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
வழக்கமாக தொடர் விடுமுறை காலங்களில் கொடைக்கானலில் இதுபோன்ற நெரிசல் ஏற்படுவது வழக்கமான நிலையில் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுவது தொடர்கிறது.
வாகன நெரிசலை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லை. நெரிசலை தவிர்க்கும் திட்டங்கள் ஏதுமில்லாத நிலையில் இதுபோன்ற அவலம் தொடர்வது கவலையளிக்கிறது.
இங்குள்ள பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மதியத்திற்கு பின் சாரல் மழை, பனிமூட்டம் என ரம்யமான சூழல் நிலவியது. தொடர்ந்து ஏரிச் சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்தும் பயணிகள் மகிழ்ந்தனர்.