வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு நச்சுத்தன்மை ஆய்வு இலவசம்
வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு நச்சுத்தன்மை ஆய்வு இலவசம்
ADDED : ஜூலை 17, 2025 12:24 AM
சென்னை:வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான, நச்சுதன்மை ஆய்வுக்கான கட்டணம் முழுதும் மானியமாக வழங்கப்படுவதாக, வேளாண் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் முருங்கை, மஞ்சள், சிறிய வெங்காயம், வெள்ளரி, குடை மிளகாய், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், அரிசி, முந்திரி, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், தேங்காய் உள்ளிட்ட, பலவகை வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகள், வங்கதேசம், நெதர்லாந்து, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகளுக்கு இப்பொருட்கள் செல்கின்றன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக, பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை, வேளாண் வணிகப் பிரிவினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, ஏற்றுமதி குறியீடு, மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு உரிமம், ஏற்றுமதியாளர் வங்கியின் வாயிலாக பெற்ற ஜி.எஸ்.டி., குறியீடு, தாவர சுகாதார சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் பெற வேண்டும். இதற்காக, கடந்தாண்டு முதல் வேளாண் துறை வாயிலாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு முதல் நச்சுத்தன்மை சான்றிதழ் பெறுவது இலவசம் என, வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு, 20 லட்சம் ரூபாயை வேளாண் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து, வேளாண் வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேளாண் விளைபொருட்களில் நச்சுத்தன்மை அளவு குறித்து, ஐந்து வகையான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஆய்வு செய்து சான்றிதழ் பெற்ற பின்னரே, பல நாடுகள் விளைபொருட்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றன. ஒருமுறை ஆய்வு செய்வதற்கு, தனியார் ஆய்வகங்களில், 9,558 ரூபாய் கட்டணம் வாங்கப்படுகிறது.
இந்த கட்டணத்தையும் வேளாண் துறை ஏற்றுள்ளது. நடப்பாண்டு, 209 ஆய்வுகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. தேவையுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அல்லது ஏற்றுமதியாளர்கள், வேளாண் வணிகப் பிரிவினரை அணுகலாம்.
இவ்வாறு கூறினார்.