மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கத்தினர் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கத்தினர் போராட்டம்
ADDED : பிப் 17, 2024 12:15 AM

சென்னை:சென்னை அண்ணாசாலை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணாசாலையில், தலைமை தபால் நிலையம் முன், மத்திய அரசை கண்டித்து, மத்திய தொழிற் சங்கங்கள், தொழிற் சங்க சம்மேளனம், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தோர் போராட்டம் நடத்தினர்.
இதில், விவசாய பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க வேண்டும். காஸ் சிலிண்டர் விலை உயர்வு, மோட்டார் தொழிலை பாதிக்கும் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், 260 பெண்கள் உட்பட 1,100 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
அதேபோல, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகினர். அரியலுார் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலுாரில் போராட்டத்தில் ஈடுபட்ட, 636 பேர் கைது செய்து விடுவிக்கப்பட்டனர்.
திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவனத்தில், ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட, 10 தொழிற்சங்கங்கத்தினர் இணைந்து, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர்.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னையில் டேம்ஸ் சாலையை மறைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததால் அண்ணாசாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சென்னையில், ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி நடத்துவதற்கென சில இடங்கள் உள்ளன. இதுபோன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்தாலோ, வாகன போக்குவரத்து பாதிக்காத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆனால், நேற்று காலை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசாரின் தடுப்புகளை துாக்கி எறிந்து சாலையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தையும் அண்ணாசாலை வழியாக போக்குவரத்து போலீசார் அனுமதித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் அண்ணாசாலை, பின்னி லிங் சாலை, டேம்ஸ் சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தினர். மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக, 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.
போலீசாரின் வாகனம் மட்டுமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக, 17 பஸ், ஐந்து போலீஸ் வாகனமும் அண்ணாசாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றதால், தாராப்பூர் டவர் முதல் டி.வி.எஸ்., பஸ் நிறுத்தம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சாலையை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மீண்டும் ஏதேனும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரினால், அதை போலீசார் நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.