முத்தரப்பு பேச்சு தோல்வி தொழிற்சங்கங்கள் அதிருப்தி
முத்தரப்பு பேச்சு தோல்வி தொழிற்சங்கங்கள் அதிருப்தி
ADDED : மார் 06, 2024 11:55 PM

சென்னை:போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, சி.ஐ.டி.யு., --- ஏ.ஐ.டி.யு.சி., - அ.தொ.பே., - ஐ.என்.டி.யு.சி.. உள்ளிட்ட சங்கங்களுடன், ஏழாவது கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில், தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நடந்தது.
மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கிஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கத்தினர் தரப்பில் சவுந்தரராஜன், ஆறுமுக நயினார், கமலக்கண்ணன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாலை, 3:30 மணி அளவில் துவங்கிய பேச்சு இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இருப்பினும், முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சு மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:
பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த ஒரு மாத அகவிலைப்படி உயர்வை, ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றோம்.
மற்ற கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தனர்; இது, எங்களுக்கு திருப்தியில்லை.
இடைக்கால நிவாரணத்தையாவது ஒரு வாரத்துக்குள் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டுக்கு, 497 ரூபாய் கட்ட வேண்டிய இடத்தில், 1112 ரூபாய் செலுத்த வேண்டும் என்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியர்களை வஞ்சிக்கக் கூடிய செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தொ.பே., செயலர் கமலக்கண்ணன் கூறுகையில், ''வரும் 11ம் தேதிக்குள் முடிவு கூறாவிட்டால், எங்களது கூட்டமைப்பு சார்பில் அடுத்தகட்ட போராட்டத்தை துவங்குவோம்,'' என்றார்.

