ADDED : ஜூலை 18, 2025 10:27 PM
சென்னை:உணவு பொருட்களுக்கு இரு விதமான வரி மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடுதல் செயலர் பங்கஜ்குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகளை, டில்லியில் நேற்று முன்தினம் சந்தித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
உணவுப்பொருட்களுக்கு தற்போது, ஜி.எஸ்.டி.,யில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் ஆகிய விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி வகிதங்களை மறுசீரமைக்கும்போது, பூஜ்ஜிய வரி, 5 சதவீதம் என, இரண்டு விதமான வரிகள் மட்டுமே இருக்க வேண்டும்.
உதாரணமாக, வேளாண் பொருட்களை அப்படியே விற்றாலோ அல்லது அரைத்து மாவாக்கி விற்றாலோ, வரி இருக்கக் கூடாது; அதை மதிப்பு கூட்டி விற்றால், 5 சதவீதம் தான் வரி இருக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடுதல் செயலர் பங்கஜ்குமார் சிங்கிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்டுகொள்வதில்லை
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தொடர்பாக, வணிகர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர். இதுதொடர்பாக, தமிழக நிதி அமைச்சர், வணிக வரித் துறை அமைச்சர், அதிகாரிகளிடம் தெரிவித்து, மத்திய அரசிடமும், ஜி.எஸ்.டி., கவுன்சிலிடமும் வலியுறுத்துமாறு, வணிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அதன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், வணிகர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர் நேரடியாக, டில்லி சென்று ஜி.எஸ்.டி., கவுன்சில் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.