'சமாதான்' திட்டம் அவகாசத்தை நீட்டிக்க வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை
'சமாதான்' திட்டம் அவகாசத்தை நீட்டிக்க வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை
ADDED : பிப் 08, 2024 01:53 AM

சென்னை: 'சமாதான்' திட்டத்திற்கான அவகாசம், இம்மாதம் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அவகாசத்தை நீட்டிக்குமாறு, அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் வணிக வரித்துறைக்கு, 1.42 லட்சம் வணிகர்களும், நிறுவனங்களும் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொடர்பாக, 2.11 லட்சம் வழக்குகள் உள்ளன.
அவர்களிடம் இருந்து வரி நிலுவையை வசூலிக்க, 2023 அக்., 16ல் சமாதான திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தில், 50,000 ரூபாய்க்கு குறைவான வரி நிலுவை இருந்த, 95,000 வணிகர்களின் நிலுவை வரி மற்றும் அபராதம் முழுதும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதேபோல், ஒவ்வொரு வரி நிலுவை விகிதத்திற்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. 'சமாதான் திட்டம், 2024 பிப்., 15ம் தேதி வரை தான் நடைமுறையில் இருக்கும்' என, அரசு அறிவித்தது. பல முறை, 'நோட்டீஸ்' அனுப்பியும், பலர் வரி நிலுவை செலுத்தாமல் உள்ளனர்.
அவர்களின் சொத்துக்களை முடக்கி ஏலம் விட்டு, வரி நிலுவையை வசூலிக்க, சொத்து விபரங்கைளை, வணிக வரித்துறை சேகரித்துள்ளது. அரசு அளித்த அவகாசத்திற்கு, இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.
இதுகுறித்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:
வரி நிலுவை வைத்திருக்கும் வணிகர்களில் சிலர், தங்களின் தொழிலில் இருந்து வெளியேறி விட்டனர். இயற்கை பேரிடர் காரணமாக பலர் நெருக்கடிக்கு ஆளாகினர்.
எனவே, சமாதான் திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்குமாறு, அரசுக்கு மனு அளி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

