ADDED : மே 31, 2025 01:38 AM

மூணாறு : கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 'கேப் ரோடு' வழியாக போக்குவரத்துக்கு தடை விதித்து இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.
கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு- போடிமெட்டு இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடந்தது. அப்போது மூணாறில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள கேப் ரோட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மலையை குடைந்து பாறைகள் உடைக்கப்பட்டன.
அதனால் மலை காலங்களில் கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இறுதியாக மே 12ல் பெய்த மழையில் பாறைகள் ரோட்டில் உருண்டு விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்ததால் கேப் ரோடு வழியாக இரவில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.
அங்கு மண் மற்றும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி கேப் ரோடு வழியாக அடுத்த உத்தரவு வரும் வரை போக்குவரத்துக்கு முற்றுலுமாக தடை விதித்து கலெக்டர் விக்னேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.
அதனால் மூணாறில் இருந்து பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, ராஜாக்காடு, ராஜகுமாரி வழியாக மாற்று வழியில் பூப்பாறை சென்று தேனி உள்பட பிற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனங்கள் உள்பட அவசர தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் கேப் ரோடு வழியாக அனுமதிக்கப்படுகிறது.