இரவு நேரத்தில் வாகன சோதனையில் போலீஸ்காரருக்கு நேர்ந்த சோகம்: காலையில் போன் செய்து குற்றவாளி வாக்குமூலம்!
இரவு நேரத்தில் வாகன சோதனையில் போலீஸ்காரருக்கு நேர்ந்த சோகம்: காலையில் போன் செய்து குற்றவாளி வாக்குமூலம்!
ADDED : டிச 10, 2025 12:41 PM

சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் வாகன சோதனையில் கார் மோதி கான்ஸ்டபிள் மேகநாதன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து கார் டிரைவர் சாய்ராம் தவறை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் நேற்று நள்ளிரவு 35 வயது கான்ஸ்டபிள் மேகநாதன் மற்றும் அவரது மூன்று சக போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி, சோதனையில் ஈடுபட முயன்றனர். காரை ஓட்டி வந்தவர் மது போதையில், கான்ஸ்டபிள் மேகநாதன் மீது மோதிவிட்டு, அவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார்.
இதில் மேகநாதன்,35, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்தும், கார் டிரைவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை தலைமறைவான கார் டிரைவர் சாய்ராம், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தனது காரில் அடிபட்டு கான்ஸ்டபிள் மேகநாதன் உயிரிழந்ததாக வாக்குமூலம் அளித்து தவறை ஒப்புக்கொண்டார்.
பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற, கார் டிரைவர் சாய்ராம் நடந்த சம்பவத்தை கூறி சரண்டர் ஆகியுள்ளார். இதனைத் தொடர்ந்து கார் விபத்து ஏற்படுத்திய சாய்ராம் (32) என்பவரை கைது செய்து அவர் மீது விபத்து ஏற்படுத்தி விட்டு ஓடுதல் பிரிவின் கீழ் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இரவு நேரத்தில் வாகன சோதனையில் கார் மோதி, கான்ஸ்டபிள் மேகநாதன் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

