ஓசூரில் துயர சம்பவம்: லாரி மீது பைக் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி
ஓசூரில் துயர சம்பவம்: லாரி மீது பைக் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி
ADDED : ஜூலை 14, 2025 09:23 PM

ஓசூர்;ஓசூரில், லாரி மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த, 3 மாணவர்கள் பலியாகினர். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மிடுகரப்பள்ளியை சேர்ந்தவர் மோகன்பாபு. செவன்த் டே தனியார் பள்ளியில் வாகன கிளீனராக உள்ளார். இவரது மகன் ஹரிஸ், 14, அத்திவாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி வீரேந்திரசிங் மகன் ஆரியான்சிங், 13, செவன்த்டே பள்ளியில் 8ம் வகுப்பும், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவில் பூசாரி ஜெகநாதன் மகன் மதன், 14, என்பவர், 9ம் வகுப்பும் படித்தனர்.
இன்று மதன் பள்ளிக்கு செல்லவில்லை. மாலை, 4:00 மணிக்கு மேல் பள்ளி முடிந்தவுடன் நண்பர்களான ஹரிஸ், ஆரியான் சிங் ஆகியோரை தன் தந்தையின் டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் அழைத்து கொண்டு, அத்திவாடி கூட்ரோட்டில் இருந்து, மத்திகிரி கூட்ரோடு நோக்கி பைக்கை ஓட்டி சென்றார். மாலை, 4:30 மணிக்கு, செவன்த்டே பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது, பைக் மோதியது. இதில், மதன் மற்றும் ஆரியான் சிங் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த ஹரிஸ், மத்திகிரி கூட்ரோடு அருகே தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சாலையோரம் எந்த சிக்னலும் இல்லாமல் லாரியை நிறுத்தியிருந்த கேரள மாநிலம், பாலக்காடு அருகே அப்புனி பரோலி பகுதியை சேர்ந்த டிரைவர் ரவி, 50, என்பவரை, மத்திகிரி போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.