sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: மாணவி, இரு மாணவர்கள் பலி 3 மாணவ - மாணவியர் பலி; கடலுாரில் சோகம்

/

தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: மாணவி, இரு மாணவர்கள் பலி 3 மாணவ - மாணவியர் பலி; கடலுாரில் சோகம்

தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: மாணவி, இரு மாணவர்கள் பலி 3 மாணவ - மாணவியர் பலி; கடலுாரில் சோகம்

தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: மாணவி, இரு மாணவர்கள் பலி 3 மாணவ - மாணவியர் பலி; கடலுாரில் சோகம்


UPDATED : ஜூலை 09, 2025 10:46 AM

ADDED : ஜூலை 09, 2025 01:10 AM

Google News

UPDATED : ஜூலை 09, 2025 10:46 AM ADDED : ஜூலை 09, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கடலுார் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணியர் ரயில் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தில் இருவர் உட்பட மூன்று மாணவ - மாணவியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து நிகழ காரணமாக இருந்த கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடலுார், தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த விஜய் சந்திரகுமாரின் மகன்கள் விஷ்வேஷ், 16, நிமலேஷ், 12. எஸ்.குமராபுரம் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளியில் முறையே 10, 6ம் வகுப்பு படித்து வந்தனர்.

சின்ன காட்டுசாகை கிராமத்தை சேர்ந்த திராவிடமணி மகள் சாருமதி, 16, மகன் செழியன், 15; அதே பள்ளியில் முறையே பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று காலை, 7:00 மணிக்கு பள்ளி செல்ல வேனில் புறப்பட்டனர். வேனை, கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சங்கர், 47, ஓட்டினார்.

காலை, 7:40 மணியளவில், செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில்வே கேட்டைகடந்து வேன்.

ரயில்வே கேட் திறந்திருந்தது. அதே வேளையில், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த பயணியர் ரயில், கண் இமைக்கும் நேரத்தில் பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதி, சில மீட்டர் துாரம் சென்று நின்றது.

மோதிய வேகத்தில் வேனில் பயணித்த நான்கு மாணவ - மாணவியர், டிரைவர் துாக்கி வீசப்பட்டனர். வேன் உருக்குலைந்து, 100 மீட்டர் துாரத்தில் பாகங்கள் பறந்து விழுந்தன.

இந்த கோர விபத்தில், நிமலேஷ், சாருமதி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தண்டவாளத்தில் மேல் பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து தொங்கின.

விபத்தில் சிக்கிய மாணவ - மாணவியரை அண்ணாதுரை, 55, என்பவர் காப்பாற்ற முயன்றார். அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி அவர் மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரையும், செழியன், விஷ்வேஷ், டிரைவர் சங்கர் ஆகியோரையும் கிராம மக்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.

புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட செழியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். விஷ்வேஷ், சங்கர் மற்றும் அண்ணாதுரை ஆகிய மூன்று பேருக்கு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், தாசில்தார் மகேஷ், ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். ஆம்புலன்ஸ்,

விபத்தில் பலியான மாணவ - மாணவியர் குடும்பத்திற்கு, தலா, 5 லட்சம் ரூபாய், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு, தலா 1 லட்சம் ரூபாய், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு ரயில்வே தரப்பில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா, 5 லட்சம், படுகாயமடைந்தோருக்கு 2.5 லட்சம், லேசான காயமடைந்தவருக்கு 50,000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து திருச்சி சென்ற சோழன் விரைவு ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை, 11:45 மணிக்கு விழுப்புறத்திற்கு புறப்பட்டு சென்றது.

மக்கள் கலெக்டரை முற்றுகையிட்டு, 'பாலம் கட்டிக் கொடுக்கும்படி மனு கொடுத்தோம்; நீங்க நடவடிக்கை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது' என்றனர்.

அதற்கு கலெக்டர், 'நீங்கள் கொடுத்த மனுவின் அடிப்படையில் ஆய்வு செய்து, பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பிவிட்டோம்' என்றார்.

அதில் சமாதானமடையாத மக்கள், கலெக்டரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மதியம் பா.ம.க., மாவட்ட செயலர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், ரயில் விபத்தில் காயமடைந்து கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து, அரசு நிவாரணம் போதுமானதாக இல்லை எனக்கூறி, அரசு மருத்துவமனை எதிரே கடலுார் - நெல்லிக்குப்பம் சாலையில், 12:45 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

'கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய், பள்ளி மாணவர்கள் உயிரிழப்புக்கு 5 லட்சம் ரூபாயா?' என, கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. எஸ்.பி., ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, இந்த ரயில் விபத்துக்கு, கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மாவின் அலட்சியமே காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அவரை 'சஸ்பெண்ட்' செய்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பங்கஜ் ஷர்மாவை சிதம்பரம் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கேட் திறந்து தான் இருந்தது

பள்ளி வேனில் நான் பின்புற சீட்டில் அமர்ந்திருந்தேன். ரயில்வே கேட்டை வேன் நெருங்கும் போது கேட் திறந்து தான் இருந்தது. சிக்னல் எதுவும் போடவில்லை. ரயில் வரும் சத்தமும் கேட்கவில்லை. ரயில்வே கேட்டை கடக்கும் போது தான் ரயில் மோதியது. நான் வேனில் இருந்து துாக்கி எறியப்பட்டேன். எல்லாமே ஒரு நொடியில் நடந்து விட்டது.
- விஸ்வேஷ்,காயமடைந்த மாணவர்



'தவறிழைத்தோருக்கு தண்டனை'

இப்படிப்பட்ட விபத்துகள் நடைபெறமால் தடுக்கும் பொறுப்பு ரயில்வே துறைக்கு உண்டு. தவறு செய்த அதிகாரிகளும், ஊழியர்களும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
- தமிமுன் அன்சாரி, தலைவர், மனித நேய ஜனநாயக கட்சி.



கலெக்டர் மீது பாய்கிறது ரயில்வே

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் கிராமத்தில், 170 எண் கொண்ட ரயில்வே லெவல் கிராசிங் கேட்டில், தெற்கு ரயில்வே சார்பில், முழு ரயில்வே நிதியுதவியுடன், ஒரு சுரங்கப்பாதைக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓராண்டாக, மாவட்ட கலெக்டர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. விலை மதிப்பற்ற உயிர்கள் இழப்பு மற்றும் நபர்களுக்கு காயம் ஏற்பட்டதற்கு, ரயில்வே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



கேட்டை மூடுவதே கிடையாது


மத்திய பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் ஷர்மா, 25, இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரயில்வே பணியில் சேர்ந்தவர். ஒன்பது மாதங்களாக, கடலுார் - செம்மங்குப்பம் ரயில்வே கேட் எண்.170ல் கேட் கீப்பராக பணியில் சேர்ந்துள்ளார். இரவு நேரங்களில் ரயில்வே கேட்டை பூட்டிவிட்டு, காலையில் திறப்பதும், பகல் நேரத்தில் கேட்டை திறந்து போட்டுவிட்டு டீ குடிக்கவும், சாப்பிடவும் சென்றுவிடுவார்; அந்த சமயங்களில் ரயில் வந்தாலும் கேட் மூடப்படாமல் திறந்தே கிடக்கும் என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.நேற்று காலை விபத்து நடந்தபோதும், கேட் மூடப்படாமல் இருந்ததாலேயே, பள்ளி வேன் தண்டவாளத்தை கடக்க முயன்று விபத்தில் சிக்கியதாக, வேன் டிரைவர் சங்கர், வேனில் பயணம் செய்த மாணவர் விஸ்வேஷ் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் உறுதி செய்துள்ளனர்.



'விரைவில் தானியங்கி கேட்களாக மாறும்'


விபத்து நடந்த இடத்தை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பார்வையிட்ட பின் அளித்த பேட்டி:விபத்து குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக தானியங்கி ரயில்வே கேட்களில், கேட்டுடன் சிக்னல் இணைக்கப்பட்டிருக்கும். அதனால், ரயில் கடந்த பிறகே கேட்டை திறக்க முடியும். மனிதர்களால் இயக்கப்படும் இதுபோன்ற கேட்களில் அந்த நடைமுறை இல்லை. மனிதர்களால் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான ரயில்வே கேட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தானியங்கி ரயில்வே கேட்களாக மாற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



சந்தேகம் ஏற்படுத்தும் கேள்விகள்

1. பள்ளி வேன் டிரைவர் தினமும் அந்த வழியாக சென்று குழந்தைகளை அழைத்து வருகிறார். அவ்வாறு இருக்கும் போது, விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியர் ரயில் வரும் நேரம் வேன் டிரைவருக்கு தெரியாமல் போனது எப்படி?
2. சாதாரணமாக நாம் சாலையை கடக்கும் போது, இருபுறமும் பார்த்து விட்டு தான் கடக்கிறோம். ஆனால், ரயில் பாதையை கடக்கும் போது, இருபுறமும் பார்க்காமலேயே கடக்க முடியுமா?
3. ரயில்வே கேட் திறந்திருந்த போதிலும், வேன் டிரைவர் பல மாணவர்களின் எதிர்காலத்தை கருதி பொறுப்பாக நடந்து கொண்டிருக்க வேண்டாமா?
4. விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியர் ரயில், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்வதால், கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கால்நடைகளுக்காகவும், சாலையை பாதசாரிகள் கடப்பதற்காகவும் எச்சரிக்கை செய்ய ரயில் டிரைவர் ஹாரன் அடித்திருக்க வேண்டும். அப்படி ஹாரன் அடிக்கப்பட்டதா?



கேட்டை திறக்க கூறவில்லை வேன் டிரைவர் மறுப்பு


கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில், 'வேன் டிரைவர் சொன்னதால்தான் கேட்டை திறந்து விட்டேன்' என கேட்கீப்பர் பங்கஜ் ஷர்மா கூறியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேன் டிரைவர் சங்கரிடம் கேட்டபோது, 'கேட்டை திறக்குமாறு நான் கூறவில்லை' என மறுத்தார்.

ரூ.1 கோடி நிவாரணம் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ரயில் மோதிய விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் குடும்பங்களுக்கு ரயில்வே நிர்வாகம், தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கேட்கீப்பர் ரயில்வே கேட்டை மூடாமல் துாங்கியதால் விபத்து ஏற்பட்டதால், விபத்திற்கு ரயில்வே நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us