பொங்கலுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் காலி
பொங்கலுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் காலி
ADDED : நவ 14, 2025 12:48 AM
சென்னை: பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் முடிந்தது. தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து, காத்திருப்போர் பட்டியல் நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு, ஜனவரி 14ம் தேதி போகியும், 15ம் தேதி பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளன. ஜனவரி 16ல், மாட்டுப்பொங்கல், ஜனவரி 17ல் காணும் பொங்கல் வருகிறது.
ரயில்வேயில், 60 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருக் கிறது. ஜனவரி 12ம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு, நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது.
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் வாயிலாக, பயணியர் ஆர்வமாக முன்பதிவு செய்தனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில், சில நிமிடங்களில், ஜனவரி 12ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, துாத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின், 'ஸ்லீப்பர்' வசதி பெட்டிகளில், ஐந்து நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு முடிந்தது.
பகல் நேரத்தில் புறப்படும் வைகை விரைவு ரயிலில், இரண்டாம் வகுப்பு இருக்கைகள் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.
அதேநேரத்தில், மதுரைக்கு செல்லும் தேஜஸ், வந்தே பாரத் ரயில்களில் கணிசமான டிக்கெட்டுகள் இருந்தன.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, நீலகிரி செல்லும் விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, 'ஏசி' பெட்டிகளில் மட்டும் சில இடங்கள் இருந்தன.
ஜனவரி 13ம் தேதிக்கு இன்றும், ஜனவரி 14ம் தேதிக்கு நாளைக்கும் முன்பதிவு நடக்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

