ADDED : மே 15, 2025 11:51 PM
சென்னை:'மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 7,000 பயனாளிகளுக்கு, கடல்பாசி வளர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சி வழங்க, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது' என, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
தமிழக கடலோர மாவட்டங்களான, ராமநாதபுரம், நாகப்பட்டினம், துாத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், கடல்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, விற்பனை போன்றவற்றுக்கு, தொழில்நுட்ப பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, 7,000 பேருக்கு பயிற்சி அளிக்க, அரசிடம், 52.33 கோடி ரூபாய் கோரியுள்ளோம்.
தமிழக அரசின் மீன்வளத்துறை, மீனவர் கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளும், அரசு துறைகளும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
இதற்கான ஒப்புதல் கோரி, தமிழக அரசிடம் கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. ஒப்புதல் வந்ததும், திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.