ADDED : பிப் 02, 2024 11:18 PM
சென்னை:''தமிழகத்தில் உதவி தேர்தல் அலுவலர்களுக்கு, பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. போலீஸ் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு, 9ம் தேதி டில்லியில் பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. முதல் கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. உதவி தேர்தல் அலுவலர்கள், 300 பேருக்கு ஐந்து கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கடைசி கட்ட பயிற்சி, வரும் 9ம் தேதி நிறைவடையும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், காவல் துறை சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி, 9ம் தேதி டில்லியில் நடக்க உள்ளது. தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு, அவர்களுக்குரிய சின்னம் வழங்கப்படும்.
அங்கீகாரம் பெறாத பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், குறிப்பிட்ட சின்னத்தை பெற விரும்பினால், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுத வேண்டும். அதை தேர்தல் கமிஷன் பரிசீலித்து முடிவை அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

