சிறுதானியம், நிலக்கடலை ஏற்றுமதியை அதிகரிக்க பயிற்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
சிறுதானியம், நிலக்கடலை ஏற்றுமதியை அதிகரிக்க பயிற்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
ADDED : ஏப் 04, 2025 05:07 AM

சென்னை : ''சிறுதானியங்கள், நிலக்கடலை, பலா போன்றவற்றின் விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி பயிற்சி வழங்கப்படும்,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில் வேளாண் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* முக்கிய பயிர்களின் சான்றளிக்கப்பட்ட விதைகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை, விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக, 25 கோடி ரூபாய் நிதியில், ஏழு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்
* ரசாயன உரங்களின் தரத்தை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, திருநெல்வேலி, கடலுார் மாவட்டங்களில், 6 கோடி ரூபாய் செலவில், உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும்
* வேளாண் விளைபொருட்களின் சேமிப்பு காலத்தை நீட்டிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்
* திருவாரூர் இடும்பாவனம், திண்டுக்கல் வேடசந்துார், திருவள்ளூர் போந்தவாக்கம், தஞ்சாவூர், ஈரோடு கள்ளிப்பட்டி ஆகிய ஐந்து இடங்களில், வேளாண் விரிவாக்க மையங்களில், 3.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விதை சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்
* அதிக வரத்து காலங்களில் மாம்பழங்கள் வீணாவதை தடுத்து, விவசாயிகள் வருமானம் பெறுவதற்காக, வங்கி கடன் உதவியுடன் எட்டு நபர்களுக்கு, தலா 12.25 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி, மாம்பழ கூழ் தயாரிப்பு கூடங்கள் அமைக்கப்படும்
* பயிர்களுக்கு ஏற்ப உர பரிந்துரைகளை வழங்கும் வகையில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேலம் மாவட்டத்தில், நடமாடும் மண் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்
* சிறுதானியங்கள், நிலக்கடலை, பலா ஆகியவற்றின் விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு, உழவர் உற்பத்தியாளர்நிறுவனங்களுக்கு ஏற்றுமதி பயிற்சி மற்றும் வர்த்தக இணைப்பு கூட்டம் நடத்தப்படும்
* விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்ய, ஒருங்கிணைந்த தரக் கட்டுப்பாட்டு பிரிவு துவங்கப்படும்
* விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட, 1000 பேருக்கு வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் இயந்திரங்களை இயக்கவும், பராமரிக்கவும் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.