'மின்மாற்றி கொள்முதல் ஊழல் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்'
'மின்மாற்றி கொள்முதல் ஊழல் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்'
ADDED : செப் 28, 2024 02:40 AM
சென்னை:'தமிழக மின் வாரியத்திற்கு 400 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மின்மாற்றி கொள்முதல் ஊழல் வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக மின் வாரியத்திற்கு, 2021 முதல் 2023 வரை, அதிக விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில், 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. அதன் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மின்மாற்றிகளை வாங்குவதில் திட்டமிட்ட கூட்டுச்சதி நடந்துள்ளது. ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு, சந்தை விலையை விட 50 சதவீதம் கூடுதலாக குறிப்பிட்டு உள்ளனர்.
ஏலத்தில் பங்கேற்ற அனைத்து ஒப்பந்ததாரர்களும், சந்தை விலையை விட அதிக விலையை குறிப்பிடுவது இயல்பாக நடக்க வாய்ப்பில்லை.
மின்மாற்றி கொள் முதல் ஊழலில் விசாரிக்கப்பட வேண்டியவர், மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. ஊழல் வழக்கில் கைதாகி 471 நாட்களுக்குப் பின் விடுதலையான அவரை பெரும் தியாகம் செய்தவர் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டுகிறார். செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசு இயந்திரமே செயல்படுகிறது. இதனால், மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நியாயம் கிடைக்காது.
எனவே, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.