'திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும்'
'திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும்'
ADDED : ஆக 05, 2025 11:28 PM
சென்னை:'திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், சார் - பதிவாளர்களுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்.ஜி.பி.கி.யூ.ஏ., - பிளஸ் எனும் தன்பாலின ஈர்ப்பு, எதிர்பாலின ஈர்ப்பு சமூகத்தினரின் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
திருநங்கையரின் நீண்ட கால போராட்டத்துக்கு பின், 'தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை 2025' மாநில அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, கடந்த ஜூலை 31 முதல் அமலுக்கு வந்துள்ளது. இத்தகைய கொள்கையை கொண்டு வந்ததற்காக, மாநில அரசின் முயற்சி பாராட்டுக் குரியது.
இதுபோன்ற கொள்கையை, ஆறு மாநிலங்கள் கொண்டு வந்துள்ளன. அந்த வரிசையில், ஏழாவது மாநிலமாக தமிழகம் இணைந்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, மாநில அரசு முடிவெடுக்க வேண்டும். அதன் வாயிலாக, ஒவ்வொரு முறையும் இட ஒதுக்கீடு கோரி, அவர்கள் நீதிமன்ற கதவுகளை தட்ட வேண்டிய நிலை ஏற்படாது.
அதேபோல, திருநங்கையர் திருமணங்களை, உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ள போதிலும், அந்த திருமணங்களை பதிவு செய்யும்போது, அவர்கள் பல சவால்களை சந்திக்கின்றனர். எனவே, திருநங்கையர் திருமணங்களை, ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதால், இந்த திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், சார் - பதிவாளர்களுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.