நிலுவை தொகையுடன் ஊதிய உயர்வு வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
நிலுவை தொகையுடன் ஊதிய உயர்வு வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 14, 2025 12:20 AM

சென்னை:புதிய ஊதிய உயர்வுடன், நிலுவை தொகையும் வழங்க வேண்டும் என, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
போக்குவரத்து ஊழியர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த பேச்சில், துறையின் செயலர் பணீந்திர ரெட்டி, கூடுதல் செயலர் கார்மேகம், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்கள் சார்பில், நடராஜன், தர்மன், சவுந்தரராஜன், ஆறுமுகநயினார், கமலகண்ணன், தாடி ம.ராசு உள்ளிட்ட 13 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அனைத்து சங்கங்களையும் ஒருசேர அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.
நான்கு மணி நேரம் நடந்த பேச்சுக்கு பின், தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன்: 2003 செப்., 1-ல் இருந்து நிலுவைத்தொகை, ஊதிய உயர்வுடன் கூடிய ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும். பிற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வும், ஓய்வு பெறும்போதே பணப்பலனும் வழங்கப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
கடந்த ஆட்சியில் தொழிலாளர் நலனுக்கு விரோதமாக நிறைவேற்றப்பட்ட எட்டு அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் நடராஜன்: கடந்த 2005-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு சங்கத்துடனும் தனித்தனியாக பேச்சு நடத்தப்பட்டது. தற்போது, எந்த சங்கத்தையும் ஒதுக்கவில்லை.
'மினி பஸ் இயக்கம் குறித்து அச்சப்பட தேவையில்லை; தனியார்மய நடவடிக்கை இல்லை' என, அமைச்சர் உத்தரவாதம் அளித்திருக்கிறார்.
கருணாநிதி உருவாக்கிய போக்குவரத்து கழகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்கிறோம்.
அண்ணா தொழிற்சங்க பேரவை பொதுச்செயலர் கமலகண்ணன்: சமூக நீதி பேசும் அரசு, 70 சதவீத சங்கங்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ளோரை பேச்சுக்கு அழைத்திருப்பதை கண்டிக்கிறோம்.
அடுத்தமுறை அனைத்து சங்கங்களும் ஒருசேர பேச்சுக்கு அழைக்கப்படும் என, அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளார்; 25 சதவீத ஊதிய உயர்வு கோரியுள்ளோம்.
ஊழியர்கள் பிரச்னையை பேச முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்று நடக்க உள்ள பேச்சில், 73 சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.