ADDED : ஜன 23, 2025 12:25 AM

சென்னை:போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்.கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, சேலம், கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவில் உட்பட 24 இடங்களில், 6,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சென்னையில் பிராட்வே பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுக நயினார், பொருளாளர் சசிகுமார் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஊழியர்கள் சிலர், பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர், பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, ஆறுமுக நயினார் கூறியதாவது:
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டம் வரும் என தெரிந்தே, 10,000 வழித்தடங்களில் பஸ்களை இயக்குகின்றன. இதில் ஏற்பட்டுள்ள 45,000 கோடி ரூபாயை, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்கவில்லை.
இதனால், 30,000 கோடி ரூபாய் கடன் வாங்கியும், தொழிலாளர்களின் பணம், 15,000 கோடி ரூபாயை செலவு செய்தும், நிர்வாகம் நடத்தப்படுகிறது. இவ்வாறு போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த 2017ல், 22,500 பஸ்கள் ஓடிய நிலையில் தற்போது 18,500 பஸ்களே உள்ளன. ஆண்டுக்கு 10 சதவீத பஸ்களை அதிகரிப்பதற்கு பதிலாக, 4,000 பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களின் பணத்தை செலவு செய்ததால், ஓய்வுபெற்ற 8,000 பேருக்கு, 3,500 கோடி ரூபாய் நிலுவை வழங்க வேண்டியிருக்கிறது.
புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.
இந்த போராட்டத்துக்கு பின்னும் தீர்வு கிடைக்காவிட்டால், வேலை நிறுத்தத்தை நோக்கி நிர்வாகம் தள்ளுவதாகவே கருத வேண்டியிருக்கும். அடுத்தகட்ட போராட்டம் வரும் 27ம் தேதி அறிவிக்கப்படும்.
பணியாளர்களை நியமிக்காமலேயே நியமிக்கப்படுவதாகவும், தனியார் மயத்தை முன்னெடுத்து விட்டு, தனியார் மயம் இல்லை என்றும் துறை அமைச்சர் சொல்கிறார். அவரது சொல்லுக்கும், செயலுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக, தி.மு.க., அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
போக்குவரத்துக் கழகங்களை சீரமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அப்போதைய அரசிடம் பட்டியல் அளித்தார். அதை நிறைவேற்றக் கோரியே, இப்போது நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.