போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற 'ஸ்டிரைக்' துவக்கம்: பஸ்கள் இன்று ஓடுமா?
போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற 'ஸ்டிரைக்' துவக்கம்: பஸ்கள் இன்று ஓடுமா?
ADDED : ஜன 09, 2024 07:36 AM

சென்னை : அரசு நடத்திய சமரச பேச்சு தோல்வியில் முடிந்ததால், போக்குவரத்து கழக ஊழியர்கள், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்குகின்றனர்.
அரசு போக்குவரத்துகழகங்களில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை, அரசு ஏற்க வேண்டும்
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்
ஊதிய உயர்வு வழங்க வேண்டும்
வாரிசு பணி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும்
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இந்த கோரிக்கைகளை, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - அ.தொ.பே., உள்ளிட்ட, 24 தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கடந்த 5ம் தேதி தொழிற்சங்க தலைவர்களுடன் பேசினார். கோரிக்கைகளை நிறைவேற்ற அவகாசம் கோரினார். மீண்டும் 7ம் தேதி பேசலாம் என்றார். அதன்படி, பேச்சு நடத்தவில்லை.
இதற்கிடையே, தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில், மூன்றாம் கட்ட சமரச பேச்சு நேற்று நடந்தது. தொழிற்சங்க தலைவர்கள், போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். முக்கிய கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற முடியாது என, நிர்வாகம் கைவிரித்ததால், தொழிற்சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்; பேச்சு தோல்வி அடைந்ததாக அறிவித்தனர்.
இந்த செய்தி பரவியதும், வெளியூர்களில் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர். அதனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில், நேற்று மாலை முதல் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி:
'தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் எதையும் ஏற்க இயலாது. பொங்கலுக்கு பின் பேசலாம்' என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் உறுதி அளித்தபடி மீண்டும் பேச்சு நடத்தவில்லை. மூன்றாவது சுற்று சமரச பேச்சில், எந்த கோரிக்கையையும் ஏற்கப்படவில்லை.
போக்குவரத்து ஊழியர்களை, அரசு இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது. எந்த துறையிலும் இழைக்கப்படாத அநீதியை, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கிறது.
தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை, தொடர்ச்சி 3ம் பக்கம்
எட்டு ஆண்டுகளாக தராமல் உள்ளனர். 96,000 ஓய்வூதியர்களுக்கு சராசரியாக மாதம் 6,000 ரூபாய் வழங்கப்படாமல் உள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை பிறகு பேசலாம்; ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை, 2,000 கோடி ரூபாயை வழங்குவது பற்றி கூட பிறகு பேசலாம். பொங்கலுக்கு முன்பாக, 46 சதவீத அகவிலைப்படியை ஓய்வூதியர்களுக்கு கொடுக்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி கொடுக்க வேண்டும் என்று கோரினோம்; மறுத்து விட்டனர்.
ஊதிய ஒப்பந்த பேச்சு துவங்கும் தேதியையும் சொல்ல மறுக்கின்றனர். அப்படி இருக்கும் போது, வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு கூற, அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? மாதம், 70 கோடி ரூபாய் செலவில், பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கூறி விட்டோம். எதற்கும் ஒத்துவராமல், அரசு தவறு செய்கிறது. வேலை நிறுத்தத்தை தவிர்க்க முடியாது.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த, 2,000 கோடி ரூபாய் பணத்தை திரும்ப கேட்கிறோம். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து, உரிய இடத்தில் 13,000 கோடி ரூபாயை செலுத்தாமல் உள்ளனர். இப்படி பணத்தை கையில் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை, அரசு ஏமாற்றுகிறது.
அமைச்சர் எப்போது அழைத்தாலும் பேச தயாராக உள்ளோம். பேச்சு தோல்வி அடைந்ததால், தொழிலாளர்கள் தன்னிச்சையாக பஸ்களை நிறுத்துவதை தவிர்க்க முடியவில்லை. இன்று பஸ்கள், 100 சதவீதம் ஓடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போக்குவரத்து கழக நிர்வாகம்.