ADDED : ஜன 19, 2025 12:42 AM

மாமல்லபுரம்:செங்கல்பட்டு பாலாற்றில் திருவாங்கூர் சமஸ்தான தங்க நாணயம் மற்றும் மண் குடுவைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அண்ணா அரசு கலைக்கல்லுாரி வரலாற்று விரிவுரையாளரும், வரலாற்று ஆய்வாளர்கள் சங்க பொதுச்செயலருமான மதுரைவீரன், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் தாலுகா பகுதி பாலாற்றுப்படுகையில், 16 ஆண்டுகளாக கள ஆய்வு நடத்துகிறார். சமீபத்தில் நடத்திய ஆய்வில், நாணயங்கள், மண்குடுவை உள்ளிட்டவற்றை கண்டெடுத்ததாக தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பல்லவர், பிற்கால சோழர், சம்புவராயர் ஆகியோர் காலத்திலான, வெவ்வேறு எடையளவில் செம்பு நாணயங்கள் கிடைத்தன. திருவாங்கூர் சமஸ்தான ராஜா வீரநாராயணன் காலத்தை சேர்ந்த தங்க நாணயமும் கிடைத்தது.
இதில், 45 சதவீதம் தங்கம், 55 சதவீதம் வெள்ளி மற்றும் செம்பு போன்ற கலப்பு உலோகங்களால் செய்யப்பட்டு, 350 மில்லி கிராம் எடையுடன் உள்ளது. 3ம் நுாற்றாண்டு கால மெசபடோமியா நாகரிகம் தொடர்பான அகழாய்வில் கிடைத்த, வினோத வடிவ மண் குடுவையை போன்றே, பாலாற்றிலும் முதல்முறையாக மண் குடுவை கிடைத்தது.
குடுவை உடைந்து தனித்தனி பாகங்களாக கிடைத்தது. பாகங்களை இணைத்த போது, குடுவையாக உள்ளது. அதன் கொள்ளளவு ஐந்து லிட்டர். குடுவையை சுற்றிலும் வினோத குழல்கள் உள்ளன. பயன்பாடு பற்றி தெரியவில்லை. தங்க நாணயத்தை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.