ADDED : ஏப் 19, 2025 05:05 AM

சென்னை: 'பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த, சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களில், மரங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 23 சதவீதமாக உள்ள பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பசுமை தமிழகம் இயக்கம், 2021ல் துவக்கப்பட்டது. இந்த இயக்கம் வாயிலாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
தற்போது அரசின் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காலி இடங்கள், தனியார் நிலங்களில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. நகரங்களில் பசுமை பரப்பளவு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், சேலம் ஆகிய ஆறு நகரங்களில், மரங்கள் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட உள்ளது.
கணக்கெடுப்பில் தெரிய வரும் விபரங்கள் அடிப்படையில், தேவையான இடங்களில், மரங்கள் அதிகம் நடுவதற்கான பணி முடுக்கி விடப்படும் என்று, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.