'இருந்த இடத்தில் இருந்து படம் காட்டாதீர்' கடலோர ஆணையத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு
'இருந்த இடத்தில் இருந்து படம் காட்டாதீர்' கடலோர ஆணையத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : அக் 18, 2024 10:13 PM
சென்னை:'நேரில் ஆய்வு நடத்தி, உள்ளூர் மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே, கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தை இறுதி செய்ய வேண்டும்' என, தமிழக மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், புதிய கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் உள்ளது. அந்த திட்ட வரைவு, அனைத்து அம்சங்களிலும் முழுமையாக இல்லை.
'இது, மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்' என, ஜேசு ரெத்தினம் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த தீர்ப்பாயம், 'அனைத்து அம்சங்களிலும், முழுமையான வரைவு திட்டத்தை பொது வெளியில் வெளியிட்ட பின், கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும்' என, தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
தமிழக கடலோரங்களில் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகள் குறித்து, தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் நேரில் ஆய்வு நடத்த வேண்டும். அப்போது அங்கு வசிக்கும் மீனவர்கள், உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும்.
கடலோர மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனைகளையும் பெற வேண்டும்.
அதன்பின், பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, தற்போதைய கடலோர மண்டல மேலாண்மை வரைபடத்தில் திருத்தங்கள், சேர்த்தல்கள் செய்ய வேண்டும். இதையடுத்தே, புதிய கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தை இறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.