கீழக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் காலக்கெடுவுக்குள் முடிக்க தீர்ப்பாயம் உத்தரவு
கீழக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் காலக்கெடுவுக்குள் முடிக்க தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஆக 23, 2025 01:48 AM
சென்னை:'மன்னார் வளைகுடா கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, கீழக்கரையில் பாதாள சாக்கடை அமைப்பையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்' என, ராமநாதபுரம் கலெக்டருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில், 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக மன்னார் வளைகுடா கடலில் பல ஆண்டுகளாக கலக்கிறது.
இதனால், கடலில் தொடர் மாசு ஏற்பட்டு, அப்பகுதியில் வாழும் மீன்கள், ஆமைகள் போன்ற அரிய வகை உயினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. முத்து குளித்தல், அரிய வகை சங்கு சேகரித்தல் உள்ளிட்ட பல வகையான கடல் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது' என, கடந்த 2024 டிசம்பர் 30ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ராமநாதபுரம் கலெக்டர், கீழக்கரை நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
ராமநாதபுரம் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில், 'கீழக்கரை நகராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், கழிவுநீர் நேரடியாக கடலில் விடப்படு கிறது.
எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க,3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தருமாறு, நகராட்சி கமிஷனர் கோரியிருந்தார்.
இந்த இடம் நீர்நிலை என்பதால், காஞ்சிரங்குடி மற்றும் பள்ளமோர்குளம் கிராமத்தில், புதிய இடத்தை நகராட்சி அடையாளம் கண்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த பின், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்ப்படும்' என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், கீழக்கரை நகராட்சியில், பாதாள சாக்கடை அமைப்பு நடைமுறையில் உள்ளதா என்ற, தகவல் இல்லை. கீழக்கரையில் இருந்து, பள்ளமோர்குளம் கிராமம் ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில்,'கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 11.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, கீழக்கரை நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.
எனவே, பாதாள சாக்கடை திட்டம், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் செப்டம்பர் 24ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.