காணும் பொங்கலன்று கடற்கரை குப்பையான விவகாரம் தடுக்க விதிகள் உருவாக்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு
காணும் பொங்கலன்று கடற்கரை குப்பையான விவகாரம் தடுக்க விதிகள் உருவாக்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஜன 31, 2025 12:27 AM
சென்னை:'விநாயகர் சதுர்த்தியை போல, காணும் பொங்கலுக்கும் விதிகளை வகுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 16ம் தேதி, காணும் பொங்கலன்று, மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானவர்கள் கூடினர். இதனால், கடற்கரை முழுதும் குப்பை மேடானது.
இதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகின. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், 'கடற்கரையின் துாய்மையை பாதுகாப்பது குறித்து மக்களுக்கு தெரியாதது வேதனை அளிக்கிறது.
'எனவே, காணும் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்கக்கூடாது என, அரசுக்கு பரிந்துரைக்க இருக்கிறோம்' என்று தெரிவித்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பண்டிகைகளின் போது குப்பை போடுவது என்பது, நாடு முழுதும் உள்ள பிரச்னை. மக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
'தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், காணும் பொங்கலன்று கூடிய மக்களால் குவிந்த குப்பைகள், அடுத்த நாள் அல்லது அதற்கு மறுநாள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன' என்றார்.
இதையடுத்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
காணும் பொங்கல் அன்று குவியும் மக்களுக்கு, பாதுகாப்பு வழங்க காவல் துறையினர் நியமிக்கப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
அதுபோல, குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என, ஏன் அறிவிப்பு வெளியிடக்கூடாது.
விநாயகர் சதுர்த்தியை போல, காணும் பொங்கலுக்கும், தமிழக அரசும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் விதிமுறைகள் வகுக்க வேண்டும். காணும் பொங்கலுக்கு ஒன்று கூடுவதுதான் கலாசாரமே தவிர, குப்பை போடுவது அல்ல.
இந்த விவகாரத்தில், தமிழக அரசு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச், 5ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவிட்டு உள்ளனர்.

