கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகள் அரசு பதிலளிக்க தீர்ப்பாயம் உத்தரவு
கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகள் அரசு பதிலளிக்க தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : செப் 29, 2024 02:51 AM
சென்னை:கொடைக்கானலில் கொட்டப்படும் வெளிமாநில பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இயற்கை எழில் நிறைந்த கொடைக்கானலில், காட் சாலை உள்ளிட்ட சாலையோரங்களில் உணவு கழிவுகள், உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை குவிந்து கிடக்கின்றன. பிளாஸ்டிக் பைகளில் உள்ள குப்பை மலை சரிவுகளில் உருண்டு செல்வதால், மலைப்பகுதியிலும் குப்பை குவிகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து, நாளிதழ்களில் செய்தி ெளியானது. அதன் அடிப்படையில் வழக்கு பதிந்து தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், திண்டுக்கல் கலெக்டரும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்; அதில், முழுமையான விபரங்கள் இல்லை. கொடைக்கானல் சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுவது குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
பிற மாநிலங்களில் இருந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள், கொடைக்கானலில் கொட்டப்படுவது குறித்து விரிவான அறிக்கையை, திண்டுக்கல் கலெக்டரும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அடுத்த விசாரணை தேதியான, டிசம்பர் 4ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.