ADDED : ஏப் 15, 2025 03:19 AM

சென்னை : தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, பணியின் போது உயிரிழந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு, டி.ஜி.பி., சீமா அகர்வால் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1944 ஏப்., 14ல், மும்பையில், 1,200 கிலோ வெடிபொருட்கள் மற்றும் எண்ணெய் இருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. மீட்பு பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், 66 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் நினைவாக, மத்திய அரசால் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ல், தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தை ஒட்டி, மத்திய அரசால் ஒரு தலைப்பு நிர்ணயம் செய்து, நாடு முழுதும் ஏப்., 14ல் இருந்து ஒரு வாரம் தீ விபத்துகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு, 'தீ விபத்தில்லா இந்தியாவை உருவாக்க ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
மேலும், தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைமை அலுவலகத்தில், தமிழகத்தில் கடந்த ஓராண்டில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், 33 தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.