ADDED : ஏப் 29, 2025 07:16 AM
சென்னை: திருச்சி - கொச்சி இடையிலான விமான சேவையை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், மே 7 முதல் துவக்க உள்ளது.
திருச்சியில் இருந்து, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி - கொச்சி இடையிலான விமான சேவையை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், 2018ல் துவக்கியது.
ஆனால், இயக்க சிக்கல்கள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, துவக்கிய சில மாதங்களிலேயே, சேவைகளை நிறுத்தியது.
இந்த மார்க்கத்தில் விமானங்களை இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, மே 7 முதல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சி - கொச்சி இடையே, தினசரி விமான சேவையை துவங்க உள்ளது.
திருச்சியில் இருந்து தினமும் பகல், 12:00 மணிக்கு புறப்படும் விமானம், மதியம், 1:00 மணிக்கு கொச்சி சென்றடையும். கொச்சியில் இருந்து மதியம், 1:40க்கு புறப்படும் விமானம், மதியம், 2:40 மணிக்கு திருச்சி வந்தடையும். விமான கட்டணம் 4,000 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
கூடுதல் விபரங்களை airindiaexpress.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.