ADDED : ஆக 20, 2026 11:07 PM
சென்னை: ''என்.எல்.சி., பிரச்னை தொடர்பாக முத்தரப்பு பேச்சு நடந்து வருகிறது,'' என, அமைச்சர் கீர்த்தனா கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - அருண்மொழி தேவன்: நெய்வேலி என்.எல்.சி., நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம், வீடுகளை கொடுத்த விவசாயிகள் இழப்பீடு, வேலைவாய்ப்பு கேட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்.
அமைச்சர் கீர்த்தனா: என்.எல்.சி., நிறுவனம் தனது சுரங்கங்கள் மற்றும் பக்கவாட்டு எல்லை பகுதி கிராமங்கள், விவசாய நிலங்கள், பொது சொத்துக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட மண் சரிவுகள் அகற்றப்பட்டன. கிராமவாசிகளுக்கு தகுந்த இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
உயரமான மண் குவியலில் இருந்து வரும் தண்ணீரை தெற்கு நோக்கி திருப்ப, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதை சுரங்க அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
அருண்மொழிதேவன்: என்.எல்.சி., நிறுவனத்தின் பதிலை அமைச்சர் வாசித்துள்ளார்; அது உண்மைக்கு புறம்பானது. இதுதொடர்பாக கடலுார் கலெக்டர் மற்றும் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் விசாரிக்க வேண்டும். விவசாய நிலங்களில், 20 ஆண்டுகளாக களிமண் படிந்துள்ளதால் சாகுபடி நடக்கவில்லை.
பா.ம.க., - சவுமியா: மனசாட்சியே இல்லாமல் இயங்கும் நிறுவனம் என்றால், அது என்.எல்.சி., தான். நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயத்தை பாழ்படுத்தி விட்டது. நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கொடுக்காமல், வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை தேர்வு செய்துள்ளனர்.
தே.மு.தி.க., - பிரேமலதா: என்.எல்.சி.,யால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், விருத்தாசலம் தொகுதியில் பாதித்துள்ளன. கால்சியம் கலந்த தண்ணீரால், அப்பகுதி மக்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் கீர்த்தனா: த.வெ.க., அரசு விவசாயிகள் பக்கம்தான் இருக்கும். என்.எல்.சி., பிரச்னை தொடர்பாக குழு அமைத்துள்ளோம்; முத்தரப்பு பேச்சு நடந்து வருகிறது.
தி.மு.க., - தங்கம் தென்னரசு: விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில், சட்டத்திற்கு உட்பட்டு இயங்கும் பட்டாசு தொழிற்சாலை மற்றும் விற்பனையகங்களில் திடீர் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் பட்டாசு தொழில் பாதித்துள்ளது.
அமைச்சர் கீர்த்தனா: அங்கு நான்கைந்து விபத்துகள் நடந்ததால், பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 177 ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினர்.
தங்கம் தென்னரசு: எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்னைக்கு போராடுவது, ஜனநாயக உரிமை. சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு செய்வதால், தொழில் முடங்கியுள்ளது. இப்போதே உற்பத்தியை தொடங்கினால்தான், தீபாவளிக்கு பட்டாசுகளை கொடுக்க முடியும்.
அமைச்சர் கீர்த்தனா: பிரச்னை தீர்ந்த பின் போராட்டம் நடத்துவது ஏன் என்பதே கேள்வி. பட்டாசு ஆலை விபத்தில், ஐந்து பேர் இறந்தனர். அப்போது யாரும் வரவில்லை. பட்டாசு ஆலைகள் பிரச்சனையை அரசியல் ஆக்குகின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
