ஈரோட்டில் வரும் 18ல் விஜய் கூட்டம்; அனுமதி கோரி த.வெ.க., மனு
ஈரோட்டில் வரும் 18ல் விஜய் கூட்டம்; அனுமதி கோரி த.வெ.க., மனு
ADDED : டிச 10, 2025 06:15 AM

ஈரோடு : ஈரோட்டில், வரும் 18ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க.,வின் பெருந்துறை ஒன்றிய இணை செயலர் சசிகுமார், ஈரோடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராம்குமாரிடம், நேற்று மனு அளித்து கூறியதாவது:
த.வெ.க., தலைவர் விஜய் ஈரோட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு, தமிழக அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கூட்டம் நடத்த வேண்டும் என்றால், அதற்கான ஏற்பாட்டுக்காக கூடுதல் நாட்கள் தேவைப்படுகிறது.
எனவே பெருந்துறை தாலுகா மூங்கில்பாளையம் கிராமத்தில் உள்ள, ஸ்ரீ விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் உரியவர்கள் தரப்பிடம் இருந்து, நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள அனுமதி பெறப்படும்.
அவ்விடத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் இருந்தபடியே பேச திட்டமிட்டுள்ளார். இக்கூட்டத்துக்கு, 10,000 நிர்வாகிகள், 20,000 மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்விடத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்களை அனுமதிக்க மாட்டோம். அதற்கான, அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

