ADDED : ஜன 07, 2026 08:07 AM

சென்னை: 'கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வரும் 12ம் தேதி, டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.
கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டம் கடந்த செப்., 27ம் தேதி நடந்தது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவர்களின் விசாரணையை, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது.
இக்குழுவினரும் சி.பி.ஐ., அதிகாரிகளும் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
கரூர் கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடமும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் காயமடைந்த நபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
அடுத்தகட்டமாக, த.வெ.க., நிர்வாகிகளிடம், மூன்று நாள்கள் விசாரணை நடத்தினர். தொடர்ச்சியாக, த.வெ.க., தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
வரும் 12ம் தேதி, டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

