காதி கிராப்ட் நிறுவன செயலி பதிவிறக்க முடியாமல் அவதி
காதி கிராப்ட் நிறுவன செயலி பதிவிறக்க முடியாமல் அவதி
ADDED : மே 02, 2025 12:50 AM
சென்னை:காதி கிராப்ட் இணைய வழி செயலியை, பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால், அந்நிறுவனத்தின் பொருட்களை, தனியார் கடைகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
கருப்பட்டி
கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை, நகர்ப்புறங்களில் விற்பனை செய்யும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தை, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் அமைத்துள்ளது. இவற்றில், தேன், திணை, கருப்பட்டி, பருத்தி, பட்டுப் புடவைகள், கைத்தறி மற்றும் கதர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கு விற்கப்படும் பொருட்கள் தரமானதாகவும், இயற்கை முறையிலும் இருப்பதால், இவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காதி கிராப்ட் நிறுவனத்தின் இணையவழி விற்பனைக்காக, 'டி.என்.காதி' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தச் செயலியை, புதிய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுப்பிக்கவில்லை
இதுகுறித்து, சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது:
தமிழக அரசின், 'டி.என்.காதி' செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இச்செயலி புதுப்பிக்கப்படாமல் இருப்பதால், தற்போதுள்ள புதிய ரக போன்களில், பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமேசான், பிளிப்காட் உள்ளிட்ட செயலிகளிலும், காதி கிராப்ட் பொருட்கள் இருப்பு இல்லாததால், வேறு வழியின்றி, காதி கிராப்டின் தேன், திணை உள்ளிட்ட பொருட்களை, தனியார் விற்பனையகத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
எனவே, காலத்திற்கு ஏற்ப செயலியை புதுப்பிப்பது, வடிவமைப்பு வசதிகளை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.