பொறுப்பு டி.ஜி.பி., நியமன திட்டத்திற்கு சிக்கல் அரசு உயரதிகாரிகளின் ஆட்டத்திற்கு 'செக்'
பொறுப்பு டி.ஜி.பி., நியமன திட்டத்திற்கு சிக்கல் அரசு உயரதிகாரிகளின் ஆட்டத்திற்கு 'செக்'
UPDATED : ஆக 03, 2025 02:10 AM
ADDED : ஆக 02, 2025 09:59 PM

தமிழகத்திற்கு பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமிக்க திட்டமிட்ட உயர் அதிகாரிகளுக்கு, திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தகுதியானவர்கள் பதவிக்கு வர வாய்ப்பு உருவாகி உள்ளது.
தமிழக டி.ஜி.பி.,யாக உள்ள சங்கர் ஜிவால், வரும், 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், புதிய டி.ஜி.பி., யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துஉள்ளன. புதிதாக தேர்வு செய்யப்படும் டி.ஜி.பி., அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கும் போது, பதவியில் இருப்பார் என்பதால், இத்தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையே, புதிய டி.ஜி.பி., தேர்வு பட்டியலில், 'சீனியாரிட்டி' அடிப்படையில், டி.ஜி.பி.,க்கள் சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோடு ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இவர்கள் மத்திய அரசில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் என்பதால், இருவரில் ஒருவர் புதிய டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக, காவல் துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இவர்களை விரும்பாத அரசு உயர் அதிகாரிகள், ஐந்து மாதங்களில் ஓய்வு பெற உள்ள அபய்குமார் சிங்கை, டி.ஜி.பி.,யாக கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
இதற்காக, தற்போதைய டி.ஜி.பி., சங்கர் ஜிவாலை ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னேற முடியவில்லை காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிய டி.ஜி.பி.,யாக சீனியாரிட்டி அடிப்படையில் இருக்கும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவதை , அரசு உயர் அதிகாரிகள் சிலர் விரும்பவில்லை.
இதனால், பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் அபய்குமார் சிங்கை, மூன்றாம் இடத்திற்கு கொண்டு வந்து, அவரை நியமிக்க திட்டமிட்டனர்.
அவ்வாறு அவர் மூன்றாம் இடத்திற்கு வர வேண்டும் என்றால், தற்போதைய டி.ஜி.பி., சங்கர் ஜிவால், ஜூலை, 31ம் தேதியுடன் விருப்ப ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
இதற்காக சில அதிகாரிகள் அவருக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால், அபய்குமார் சிங்கை விரும்பாத, தற்போதைய டி.ஜி.பி., ராஜினாமா செய்யாமல், விடுமுறையில் சென்று விட்டார்.
மேலும், விடுமுறையை இன்று வரை நீடித்ததால், சீனியாரிட்டியில் அபய்குமாரால் முன்னேற முடியவில்லை.
குறிப்பாக, டி.ஜி.பி.,க்கான தகுதியாக அவர்களது ஓய்வு பெறும் காலம், குறைந்தது ஆறு மாதமாக இருக்க வேண்டும்.
எனவே, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ராஜினாமா செய்யாததால், அபய்குமார் சிங், ஓய்வுபெறும் காலம் ஐந்து மாதமாக குறைந்துள்ளது.
எனினும், புதிய டி.ஜி.பி., நியமன கோப்புகளை கிடப்பில் போட்டு, பொறுப்பு டி.ஜி.பி.,யாக அபய்குமார் சிங்கை நியமிக்க திட்டமிட்டனர்.
தகுதியான அதிகாரி இதையறித்த சீனியாரிட்டியில் முன்னிலையில் இருக்கும் அதிகாரிகள், தங்களுக்கு வேண்டியவர்கள் வாயிலாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், 'உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது. பொறுப்பு டி.ஜி.பி.,யையும் நியமிக்க கூடாது. தகுதியான அதிகாரியை நியமிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கும்பட்சத்தில், பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்க திட்டமிட்ட அரசு உயர் அதிகாரிகள் முடிவுக்கு சிக்கல் ஏற்படும். தகுதியான அதிகாரி டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்பார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -