போலீஸ் தெரிவித்த தேதியில் மதுரையில் த.வெ.க., மாநாடு
போலீஸ் தெரிவித்த தேதியில் மதுரையில் த.வெ.க., மாநாடு
ADDED : ஆக 06, 2025 08:43 AM
சென்னை : 'போலீசார் குறித்து கொடுத்த தேதியில், மதுரையில் மாநாடு நடத்தப்படும்' என, த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் 25ம் தேதி மதுரையில் நடக்கும் என, ஏற்கனவே அறிவித்திருந்தேன். மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில், விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.
எனவே, மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக, வரும் 18 முதல் 22ம் தேதி வரை, ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படி, காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, கட்சியின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. வரும் 21ம் தேதி மாலை 4:00 மணிக்கு, ஏற்கனவே அறிவித்த அதே மதுரை மாநகரில், அதே பிரமாண்டத்தோடும், கூடுதல் உற்சாகத்தோடும் மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
இதற்கான பணிகள், ஏற்கனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தற்போது, பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, கட்சி நிர்வாகிகள், 21ம் தேதி மதுரையில் நடக்கவுள்ள மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.