விஜய் காரை மறித்த த.வெ.க., நிர்வாகி தற்கொலை முயற்சி
விஜய் காரை மறித்த த.வெ.க., நிர்வாகி தற்கொலை முயற்சி
ADDED : டிச 25, 2025 10:43 PM
துாத்துக்குடி: மாவட்ட செயலர் பதவி வழங்க வலியுறுத்தி, த.வெ.க., தலைவர் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் நிர்வாகி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி, லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்தவர் அஜிதா ஆக்னல், 38. இரண்டு ஆண்டுகளாக த.வெ.க., மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். சில நாட்களுக்கு முன் துாத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.மாவட்ட செயலர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த அஜிதா ஆக்னல், பதவி வேறு ஒருவருக்கு தரப்பட்டதால், அக்கட்சி தலைவர் விஜய் காரை மறித்து ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், துாத்துக்குடி திரும்பிய அவர், திடீரென அதிக துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அஜிதா ஆக்னல் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது குடும்பத்தினர் கூறுகையில், 'உயிர் மூச்சு உள்ளவரை த.வெ.க.,வில் தொடருவேன் என அஜிதா ஆக்னல் தெரிவித்திருந்தார். அவரை தி.மு.க.,வின் கைக்கூலி என சமூக வலைதளங்களில் த.வெ.க.,வினர் சிலர் விமர்சனம் செய்தனர். இதனால் மனமுடைந்து அவர் பத்துக்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டார்' என்றனர்.

