அ.தி.மு.க., கூட்டணியில் இணைய 100 'சீட்'; அடம் பிடிக்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்
அ.தி.மு.க., கூட்டணியில் இணைய 100 'சீட்'; அடம் பிடிக்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்
ADDED : அக் 25, 2025 04:24 AM

சென்னை: 'அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 100 தொகுதிகளை விட்டுத் தர வேண்டும்' என , த.வெ.க., தலைவர் பிடிவாதம் காட்டுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிக்கப் போவதாக கூறி வந்தார். இதற்காக மாநிலம் முழுதும், மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார்.
கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, சனிக்கிழமைகளில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்வதற்கான பட்டியலையும் விஜய் வெளியிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் திருச்சி, அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம் , நாமக்கல் மாவட்டங்களில், அவர் பிரசாரம் மேற்கொண்டார். அவரை பார்ப்பதற்கு பெருமளவில் கூட்டம் கூடியது.
இந்நிலையில், கரூரில், செப்டம்பர் 27ம் தேதி இரவு நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட, 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, வீட்டிலேயே விஜய் முடங்கியுள்ளார்.
மழை பாதிப்பு, நெல் கொள்முதல் பிரச்னை, பயிர் பாதிப்பு என அடுத்தடுத்த பிரச்னைகள், தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், அதுகுறித்து வாய் திறக்காமல் விஜய் மவுனமாக உள்ளார்.
இதனால், விஜய் தன் கட்சியை தொடர்வாரா என்ற சந்தேகத்தில், த.வெ.க., தொண்டர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, த.வெ.க.,வை கூட்டணியில் இணைப்பதற்கான பணிகளில், அ.தி.மு.க., தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமியின் மகன் மிதுன், விஜயை இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
பா.ஜ., அல்லாத கூட்டணி அமைக்கும் பட்சத்தில் , அதில் இணைய விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 100 தொகுதிகள் வரை, த.வெ.க.,விற்கு வழங்க வேண்டும் என்பதிலும், விஜய் பிடிவாதமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
துவக்கத்தில் த.வெ.க., வுக்கு 20 தொகுதிகள் வரை தருவதாக, அ.தி.மு.க., தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது, 40 தொகுதிகள் தர உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், த.வெ.க., தலைவர் விஜய், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆவதற்கும் வாய்ப்புள்ளது என, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
ஆனால், பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்கு, விஜய் அரசியல் கட்சி துவங்கவில்லை.
சினிமாவில் போராடி உச்சத்திற்கு வந்த விஜய், தன் தலைமையிலேயே தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார்.
அடகு வைக்க மாட்டேன் எனவே, பழனிசாமி முதல்வராவதற்கு, த.வெ.க., கட்சியை அடகு வைக்க மாட்டேன் எனக் கூறி விட்டார். அதேநேரம், த.வெ.க.,விற்கு 100 தொகுதிகளை தருவதாக இருந்தால், கூட்டணிக்கு சம்மதிக்கலாம் என கூறியுள்ளார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

