ADDED : ஆக 28, 2025 11:35 PM

மதுரை: மதுரை மாநாட்டில் பவுன்சர்களால் துாக்கி வீசப்பட்ட தொண்டர், விஜய் மீதும், பவுன்சர்கள் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மதுரை பாரப்பத்தியில் ஆக.21ல் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற தலைவர் விஜய், 'ரேம்ப் வாக்' வந்தபோது அவரை பார்க்கும் ஆர்வத்தில் பெரம்பலுாரைச் சேர்ந்த தொண்டர் சரத் ஏறினார். அவரை விஜய் பாதுகாவலர்களான 'பவுன்சர்கள்' அப்படியே துாக்கி கீழே வீசினர். இதுகுறித்த வீடியோ வைரலானது.
இந்நிலையில் நேற்று மதுரை எஸ்.பி., அரவிந்திடம் விஜய் மீதும், பவுன்சர்கள் மீதும் சரத் புகார் அளித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: என் மீது கட்சி சார்பில் புகார் அளித்தால் அதை சந்திக்க தயார். எனக்கு வேறு எந்த கட்சி பின்புலமும் இல்லை. மற்றவருக்கு இதுபோல் நடக்கக்கூடாது என புகார் அளித்துள்ளேன். புகாரை வாபஸ் பெற வேண்டும் என தெரியாத நபர்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு கூறினார்.
இவர் ஏற்கனவே பெரம்பலுார் போலீசில் செய்த புகாரின் அடிப்படையில் விஜய் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது மதுரை கூடக்கோவில் போலீசிற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரையிலும் புகார் அளித்துள்ளார்.