ஆக., 25ல் த.வெ.க., 2வது மாநாடு மதுரையில் நடைபெறும்: விஜய்
ஆக., 25ல் த.வெ.க., 2வது மாநாடு மதுரையில் நடைபெறும்: விஜய்
ADDED : ஜூலை 17, 2025 02:37 AM

சென்னை: 'மதுரையில், ஆகஸ்ட் 25ம் தேதி த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்படும்' என, அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கிய நடிகர் விஜய், தன் கட்சியின் முதல் மாநாட்டை, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில், கடந்த 2024 அக்டோபரில் நடத்தினார்.
அதில், ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், தென் மாவட்டங்களில் பலத்தை நிரூபிக்க, இரண்டாவது மாநாட்டை மதுரையில் விஜய் நடத்த உள்ளார்.
மதுரையில் தி.மு.க., பொதுக்குழு மற்றும் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் பா.ஜ., தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், ஹிந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாடு என தொடர்ச்சியாக அனைத்து கட்சியினரும் விழா நடத்தினர்.
அந்த வகையில், விஜய் கட்சியின் மாநாடும் மதுரையிலேயே நடத்தப்பட உள்ளது.
இதற்காக, மதுரை பாரப்பத்தியில் மாநாடு பந்தல் மற்றும் திடல் அமைக்க 237 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், வாகனங்கள் நிறுத்த தனியாக, 217 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு, நேற்று மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில், த.வெ.க., நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாநாடு தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான த.வெ.க.,வின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
'வாகை சூடும்; வரலாறு திரும்பட்டும்; வெற்றி நிச்சயம்' என்று கூறியுள்ளார்.