ADDED : மார் 03, 2024 02:37 AM
சென்னை : போதைப்பொருட்கள் கடத்தலில், தி.மு.க., நிர்வாகிகளுக்கு இருந்த தொடர்பை விளக்கும் வீடியோவை, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய, தி.மு.க., அயலக அணியின் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார். அவர், பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது, தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், 'தி.மு.க., பிரமுகர்கள் உதவியுடன், தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளன; இதுகுறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் சட்டசபையில் பேசிய பிறகும், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' என, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில், புழங்காத போதைப்பொருள், தி.மு.க., ஆட்சியில் மட்டும் உலகப் புகழ் பெறுவது எப்படி என, கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தி.மு.க., ஆட்சியை, 'டிரக் மாடல்' என்றும், கட்சியை 'டிரக் மாபியா கழகம்' என்றும் அழைத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ, 3.07 நிமிடம் ஓடக் கூடியதாக உள்ளது. இதை சமூக வலைதளங்களில், அ.தி.மு.க.,வினர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

