இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு; உறவுகள் கண்ணீர் அஞ்சலி
இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு; உறவுகள் கண்ணீர் அஞ்சலி
UPDATED : டிச 26, 2024 10:56 AM
ADDED : டிச 26, 2024 10:36 AM

சென்னை: உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி ஆழிப்பேரலை நினைவு தினம் இன்று. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ல் நிகழ்ந்த சுனாமியில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பத்தினர், கடலில், பால், பூ மிதக்க விட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சுமத்ரா கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக இழந்த சுனாமி, இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. உயிர் சேதத்துடன், கோடிக் கணக்கில் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.

அந்த சோக சம்பவத்தின் நினைவு தினமான இன்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், வானகிரி உள்ளிட்ட 28 கிராமங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தரங்கம்பாடியில் மீனவர்கள் கடற்கரையில் திதி கொடுத்து, கடலில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்கள் அமைதி ஊர்வலமாக சென்று சுனாமி நினைவு ஸ்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கினர்.


திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், தோமையார்புரம், கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளில், கடலில் பூக்கள் தூவி, பால் ஊற்றி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கடலுாரில் கடலில் பால் ஊற்றி உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

