ADDED : டிச 17, 2024 10:29 PM
சென்னை:'தமிழகத்தில் காசநோயை முற்றிலும் கட்டுப்படுத்த, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பரிசோதனை வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
காசநோயை முழுமையாக ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமின்றி, 2025க்குள் அந்நோயை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகள் அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என, காசநோய் ஒழிப்பு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காசநோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள், களப்பணியாளர்கள் வாயிலாக, வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. வீடுகளிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுவோருக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகள் வாயிலாக, 'எக்ஸ்ரே' எடுக்கப்பட்டும் வருகிறது. காசநோயாளிகளின் வாழ்வாதாரத்திற்காக, மாதம் 1,000 ரூபாய் அரசு நிதியுதவியும் அளித்து வருகிறது.
ஆனாலும், ஆண்டுக்கு, 70,000 முதல் 80,000 பேர் வரை காசநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில், ஆரம்ப நிலையில் கண்டறியப்படுவோர் விரைந்து குணமடைகின்றனர். எனவே, காசநோயால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் காசநோய் எளிதில் பாதிக்கக்கூடிய, சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட இணை நோயாளிகள், ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
நீண்ட நாட்கள் இருமல், சளி தொல்லையால் பாதிக்கப்பட்டோரும், தாமதிக்காமல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பெரும்பாலான இடங்களில், வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்யப்படுகிறது.
அதேபோல், 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில், காசநோய் கண்டறிவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அறிகுறி இருப்பவர்கள் தாமதிக்காமல், சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.