விஜய் அறிக்கை வினியோகம்: த.வெ.க., ஆனந்த் கைதாகி விடுதலை!
விஜய் அறிக்கை வினியோகம்: த.வெ.க., ஆனந்த் கைதாகி விடுதலை!
UPDATED : டிச 30, 2024 05:31 PM
ADDED : டிச 30, 2024 04:48 PM

சென்னை; சென்னையில் த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு விடுவித்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த கடிதத்தை அவர் தமது கையால் எழுதி இருந்தார்.
அறிக்கையை ஒரு பக்கம் வெளியிட்ட நடிகர் விஜய், பின்னர் கவர்னர் ரவியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இந் நிலையில், விஜய் கடிதத்தை நகல் எடுத்த அக்கட்சி நிர்வாகிகள், அதை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தனர். பூக்கடை பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி வளாகம் வெளியே மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு விநியோகித்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் இதுபோல் வழங்கக்கூடாது என்று தடுத்ததாக தெரிகிறது. ஆனாலும் த.வெ.க.,வினர் அதை கேளாமல் கடித நகல்களை விநியோகித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அங்கு வந்துள்ளார். அனைவரையும் விடுவிக்குமாறு அவர் போலீசாரிடம் கூற, அதை அவர்கள் ஏற்கவில்லை. இதை தொடர்ந்து, அனுமதி பெறாமல் கூடியதாக ஆனந்த் மற்றும் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்துக்கு போலீசார் அனைவரையும் விடுவித்தனர்.