வாக்காளர் பட்டியல், ஆட்டோ பிரசாரம், அப்புறம் நோட்டீஸ்! தொண்டர்களுக்கு த.வெ.க. திடீர் 'மெசேஜ்'
வாக்காளர் பட்டியல், ஆட்டோ பிரசாரம், அப்புறம் நோட்டீஸ்! தொண்டர்களுக்கு த.வெ.க. திடீர் 'மெசேஜ்'
UPDATED : நவ 11, 2024 05:20 PM
ADDED : நவ 11, 2024 05:18 PM

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக த.வெ.க., தொண்டர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சி அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:
இந்தியத் தேர்தல் ஆணையம், 01.01.2025 என்பதைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.
இம்மாதத்தில் 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய தேதிகளில், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. புதிதாகப் பெயர் சேர்க்க, சில ஆவணங்களைச் சான்றாக இணைக்க வேண்டும். மேலும் அங்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை உடனுக்குடன் நிரப்பி, முகாம்களில் உள்ள அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நம் கழகம் சார்பாக, தங்கள் மாவட்டத் தொகுதிகளில் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேற்குறிப்பிட்ட இரண்டு வாரங்களிலும் (நான்கு முகாம் நாட்களில்) மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் மேற்பார்வையில், ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஏழு தற்காலிகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை ஈடுபடுத்திக்கொண்டு இம்முகாம் தொடர்பாக ஆட்டோ பிரச்சாரம் செய்வதுடன் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து இப்பணியில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.