அரசியல் பாம்பை கையில் பிடித்து விளையாட...ஆரம்பிச்சுட்டேன்! : கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு
அரசியல் பாம்பை கையில் பிடித்து விளையாட...ஆரம்பிச்சுட்டேன்! : கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு
UPDATED : அக் 28, 2024 12:32 AM
ADDED : அக் 27, 2024 11:51 PM

சென்னை:''நம்பி வருவோரை அரவணைப்பது தான் எங்களின் பழக்கம். எங்களை நம்பி, 2026 சட்டசபை தேர்தலில் களம் காண வருவோருக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு வழங்குவோம்,'' என, தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் தெரிவித்தார்.
ஒரு குழந்தை முதன் முதலில் அம்மா என்று கூறும் போது, அம்மாவிற்கு சிலிர்ப்பு வரும். அந்த சிலிர்ப்பு எப்படி இருந்தது என்று கேட்டால், அம்மாவிற்கு தெரியும்.
பால் மணம் மாறாத அந்த குழந்தைக்கு, அந்த உணர்வு குறித்து சொல்லத் தெரியாது. அப்படி ஒரு உணர்வுடன் நான் இங்கு நிற்கிறேன்.
நான் குழந்தை
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பர். அப்படி ஒரு பாம்பு, ஒரு குழந்தை முன் வந்து நின்றால், அதை பிடித்து விளையாடும். பாச உணர்வு, பயம் என்றால் அந்த குழந்தைக்கு தெரியாது.
அந்த பாம்பு தான் அரசியல். அரசியலுக்கு நான் குழந்தை தான்; பாம்பாக இருந்தாலும், பயமில்லை என்பது தான் என் நம்பிக்கை. அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது; கவனமாகவே களமாட வேண்டும்.
இதுவரை பாடல் வெளியீட்டு விழாவில், நான் பேசி இருக்கிறேன்; இப்போது பேசுவது அரசியல் மேடை. இங்கு கோபம் கொந்தளித்து பேச வேண்டும் என்ற, 'கான்செப்ட்' இருக்கிறது. அது, எனக்கு செட் ஆகாது.
பேச வந்த விஷயத்தை பேசிவிட வேண்டும். அரசியல் தொழில்நுட்பம் தான் மாற வேண்டுமா; அரசியலும் மாறியே ஆகவேண்டும். இந்த உலகம் அதை மாற்றி விடும்.
அலறாதீங்க
புள்ளி விபர புலியாக நான் மேடைகளில் கதறப்போவது இல்லை. இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் குறித்து பேசப்போவதும் இல்லை. அதே நேரத்தில், கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதும் இல்லை. அரசியலில் மக்களுக்கு நம்பிக்கை தருவது கொள்கை, கோட்பாடுகள் தான். இந்த மண்ணுக்காக, இந்த மண்ணின் அடையாளமாக மாறி போனவர்கள் தான், கட்சியின் கொள்கை தலைவர்கள்.
இதற்காக ஈ.வெ.ரா., உங்கள் கொள்கை தலைவரா என்று, ஒரு கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காக அவரது கடவுள் மறுப்பு கொள்கையை, நாங்கள் கையில் எடுக்கப்போவது இல்லை.
அதில், எங்களுக்கு உடன்பாடும் கிடையாது. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும், நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பது தான் எங்களது நிலைப்பாடு.
ஈ.வெ.ரா., சொன்ன பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்த்திருத்தம், சமூக நீதி ஆகியவற்றையே முன்னெடுக்க போகிறோம். மற்றவர்கள் நம்மை பார்த்து, 'விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்று சொல்லிவிடக்கூடாது.
இவர்கள் வேகமானவர்கள்; விவேகமானவர்கள் என்று சொல்ல வேண்டும். சொல் முக்கியமல்ல; செயல் தான் முக்கியம். அரசியல் போரில் கொள்கை, கோட்பாடுகளில் சண்டை நிறுத்தத்திற்கு எப்போதும் இடமில்லை.
அதற்காக வெறுப்பு அரசியலை கையில் எடுக்க மாட்டோம். சொல்ல வந்ததை பிசிறு இல்லாமல் சொல்லி முடிப்போம். அதுவரைக்கும் நெருப்பாகத் தான் இருப்போம்.
ஆரம்பத்தில், இந்த அரசியல் நமக்கு தேவையா; மற்றவர்களை போல நாமும் நாலு காசு பார்த்து விட்டு இருப்போம் என்று நினைத்தேன்.
விடை கிடைத்தது
'நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா... அது சுயநலமில்லையா... நம்மை வாழ வைத்த மக்களுக்கு, எதுவும் செய்யாமல் இருப்பது, விசுவாசமாக இருக்குமா...' என, ஏகப்பட்ட கேள்விகள் என் மனதில் எழுந்தன.
விடையை கண்டுபிடிக்க யோசித்த போது, அரசியல் என்ற விடை கிடைத்தது. அரசியல் எப்படிப்பட்டது; நம் இயல்புக்கு, அது செட் ஆகுமா என, பூதம் போல அடுத்தடுத்து கேள்விகள் வந்தன.
இப்படி, பூதக் கண்ணாடியால் பார்த்தால், எதையும் உருப்படியாக செய்ய முடியாது. இறங்கி அடித்தால் தான் செய்ய முடியும் என, மனதில் தோன்றியது. இனி எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நாம் எவ்வளவு பலமானவர்கள் என்பதை, செயலில் காட்ட வேண்டும். எதிரிகள் இல்லாத வெற்றிகள் வேண்டுமானால் இருக்கலாம். களம் இல்லாமல் இருக்க முடியாது. நம் வெற்றியை தீர்மானிப்பது நம் எதிரிகள் தான்.
நாம் ஒவ்வொன்றாக செய்ய செய்ய, நம் எதிரிகள் நம் முன்னால் வந்து நின்று, நம்மை எதிர்க்க ஆரம்பிப்பர். ஜாதி, மதம், மொழி, ஏழை, பணக்காரன் என பிளவுவாத அரசியல் செய்வோர் எங்களது முதல் எதிரி. ஊழல் மலிந்த கலாசாரத்தை முன்னெடுப்பவர்கள் இரண்டாவது எதிரி. ஊழல் எல்லா வாழ்க்கையிலும், வைரஸ் போல பரவி இருக்கிறது. அதை ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. ஒழித்து தான் ஆகவேண்டும்.
பிளவுவாத அரசியல்
பிளவுவாத அரசியல், மதம் பிடித்த யானை; அது தன்னை காட்டி கொடுத்து விடும். இந்த ஊழல் அரசியல் எங்கு ஒளிந்திருக்கிறது; எப்படி ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. கருத்தியல் பேசி, கலாச்சார நாடகம் போடும். முகமூடி போட்டு கபட நாடகமாடும்.
சோறு சாப்பிட்டால் தான் பசியாறும்; சோறு என்று கூறினால் பசியாறாது. நமது திட்டங்கள் மக்களுக்கு பயன்படுவதாக இருக்க வேண்டும். மாற்று அரசியல்; மாற்று சக்தி என்று கூறி ஏமாற்று வேலை செய்யப்போவது இல்லை. பத்தோடு, பதினொன்று என, 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' ஆகவும் இருக்கபோவது இல்லை.
ஒரு முடிவோடு வந்திருக்கிறேன். இனி பின்னோக்கி பார்க்க மாட்டேன். இது, என் தனிப்பட்ட முடிவல்ல; தொண்டர்களுடன் சேர்ந்து எடுத்த முடிவு. எதற்கும் தயராக இருக்கிறோம். எங்கள் கூட்டம் குடும்பமாக ஏமாற்ற வந்த, கொள்ளை அடிக்க வந்த கூட்டம் இல்லை. 'பவரை' கையில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் கூட்டம் இல்லை.
பக்கா பிளானுடன் வந்த கூட்டம். மீடியாவில் கம்பு சுற்ற வந்த கூட்டமும் இல்லை. சமூகத்தை வாழ வைக்கக்கூடிய கூட்டம். ஆபாசம், அள்ளுசில்லு, அவதுாறு பரப்புவது, பயாஸ்கோப் காட்டுவது, 'ஏ டீம், பீ டீம்' என பொய் பிரசாரம் செய்து, எங்களை வீழ்த்திவிடலாம் என்று, கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம். யாராவது இந்த மக்களுக்கு உதவ மாட்டார்களா என்ற எண்ணம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் உள்ளது.
திராவிடமாடல் என ஏமாற்று
மக்களை ஏமாற்றும் ஊழல்வாதிகள், கபடதாரிகளை சந்திக்கும் நாள் வெகு துாரத்தில் இல்லை. இப்படி என்பதற்குள் வந்துவிடும். வரும் 2026ம்ஆண்டு, தேர்தல் கமிஷன் குறிக்கும் நாள் தான்; அந்த போருக்கான நாள். ஒட்டு மொத்த 234 தொகுதிகளிலும், தமிழக வெற்றிக்கழக சின்னத்தில், மக்கள் அழுத்தும் பொத்தான் அணுகுண்டாக மாறும்.
இங்கு ஒரு கூட்டம், கொஞ்ச காலமாக ஒரே பாட்டை பாடிக்கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும், குறிப்பிட்ட கலரை பூசிவிட்டு, பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்றுகிறது. இவர்கள், 'அண்டர் கிரவுண்ட்' அரசியல் செய்து கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டு, 'பாஸிஸம்' என்கின்றனர். சிறுபான்மை, பெரும்பான்மை என முழு நேரம் சீன் போடுவது, இவர்களுக்கு வேலையாக போய்விட்டது. அவர்கள், 'பாஸிஸம்' என்றால், நீங்கள் என்ன பாயாசமா? மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி எனக்கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
இனிமேல் கலர் பூசினாலும், மோடி மஸ்தான் வேலை செய்தாலும், ஒன்றும் நடக்கப்போவது இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் மேல் எந்த கலரும் அடிக்க முடியாது. பிளவுவாத அரசியல் செய்பவர்கள், எங்களது கொள்கை எதிரி. திராவிட மாடல் எனக்கூறி ஆட்சி செய்யும் ஒரு சுயநலக் கூட்டம் எங்களது அடுத்த எதிரி. மக்களுடன் மக்களாக தொடர்ந்து களத்தில் நிற்கப் போகிறோம்.
ஆட்சியில் பங்கு
மக்கள் எங்களுக்கு தேர்தலில், தனிப் பெரும்பான்மை கொடுப்பர் என்ற அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில், எங்களுடையை செயல்பாட்டை நம்பி, சிலர் எங்களுடன் வரலாம். அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி வந்தால், வந்தவர்களை அன்புடன் அரவணைக்க வேண்டும். நம்பி வருவோரை அரவணைப்பது தான் எங்களின் பழக்கம். எங்களை நம்பி களம் காண வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு வழங்குவோம்.
இவ்வாறு விஜய் பேசினார்.