தவெக எம்எல்ஏவிடம் குதிரைபேரம்; மன்னனிடம் 4 மணி நேரம் விசாரணை
தவெக எம்எல்ஏவிடம் குதிரைபேரம்; மன்னனிடம் 4 மணி நேரம் விசாரணை
ADDED : நவ 07, 2026 05:17 PM

-நமது நிருபர்-
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா, தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பேரம் பேசினர்' என குற்றம்சாட்டினார்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் செய்ய முஸ்தபாவுக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து மதுரை முன்னாள் துணைமேயர் மன்னன் தன்னிடம் பேரம் பேசியதாக போலீசில் புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (நவ.,7) விசாரணைக்கு ஆஜராகுமாறு மன்னனுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், விசாரிக்காமலேயே நவ.,5ல் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் நேற்று கைது செய்து மதுரை ஊழல்தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
'விசாரணைக்கு ஆஜராகும் முன்பே அவரை கைது செய்தது ஏன்' என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மன்னனை ஜாமினில் விடுவித்ததோடு, சம்மனில் குறிப்பிட்டிருந்த தேதியான நவ.,7 ல் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.
இன்று காலை 10:00 மணிக்கு விஸ்வநாதபுரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான மன்னனிடம் போலீசார் விசாரித்தனர். முஸ்தபா, அவரது உதவியாளர் கனிராஜிடம் போனில் பேசியது, இதன் பின்னணியில் அதிமுக தலைமை உள்ளதா போன்ற பல்வேறு சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் மதியம் 2:00 மணிக்கு விசாரணை முடிந்து அனுப்பப்பட்டார்.
