விஜய் மாநாடு சக்சஸ்; இமாலய இலக்கு; இனிமேல் தான் இருக்கு!
விஜய் மாநாடு சக்சஸ்; இமாலய இலக்கு; இனிமேல் தான் இருக்கு!
ADDED : அக் 28, 2024 04:57 PM

சென்னை: முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள த.வெ.க., தலைவர் விஜய் இனி அடுத்து செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன என்கின்றனர் சமகால அரசியலை கவனிப்பவர்கள்.
மாநாடு
சொன்னபடி வந்தார், அரசியல் கட்சியை அறிவித்தார். நேற்று விக்கிரவாண்டி சாலையில் முதல் மாநாட்டை நடத்தியும் முடித்து விட்டார் நடிகர் விஜய். மாநாடு முடிந்துவிட்டாலும் இன்னும் அதே ஜோரில் தான் உள்ளனர் த.வெ.க., தொண்டர்கள்.
அவசியம்
அரசியல் களத்தில் கால் பதித்தாகிவிட்டது. இனி நடிகர் விஜய் அடுத்து செய்ய வேண்டியது என்ன? அதற்கு திட்டமிடல்கள் மிக அவசியம் என்று அடிக்கோடிட்டு காட்டுகின்றனர் அரசியலை ஆழ்ந்து கவனிப்பவர்கள். இது குறித்து அவர்கள் கூறும் கருத்துகள் இதுதான்;
சினிமா
தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய போது அரசியலை நடிகர் விஜய் நினைத்து பார்த்து இருக்கமாட்டார். குழந்தை நட்சத்திரம், பின்னர் கதாநாயகன், அதன் பின்னர் மாஸ் ஹீரோ என கட்டங்களை தாண்டி இப்போது சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் அவர் இருக்கிறார். திரையுலகில் பல ஆபர்கள்(offer) இருந்தும் அதை ஓரம் கட்டிவிட்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார். 3 லட்சம் பேர்
திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் சூழலில் அரசியலை கையில் எடுத்திருப்பது சாதாரணமானது அல்ல. மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் என்கிறது காவல்துறை. 234 தொகுதிகளில் இருந்தும் இவர்கள் வந்திருக்கிறார்கள்.
தேர்தல் கள அரசியல்
3 லட்சம் பேர் என்பது தொடக்க அரசியல் களத்தின் முதல் மாநாட்டுக்கான மாஸ் கூட்டம் என்றாலும் இந்த கூட்டத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வது அல்லது அதை அதிகரிக்க வேண்டும் என்றால் அதை தமது செயல்பாடுகள் மூலமே விஜய் செய்து காட்ட முடியும்.
கள எதிரி
தமிழக அரசியலில் தி.மு.க.,வை எதிர்கொள்வது எளிதானது அல்ல. அதற்கான திட்டமிடல் அவசியம். அதையும் விட மிக அவசியம் அந்த திட்டமிடலை செயலாக்குவது.
பயணம்
2026ம் ஆண்டு தேர்தல் பணிகளை என்றோ தொடங்கி, நாள்தோறும் அந்த பணிகளை கட்சி நிர்வாகிகள் மூலம் ஸ்கேன் செய்து வாக்கு வங்கி அரசியலை தி.மு.க., ஸ்திரப்படுத்தி வருகிறது. அ.தி.மு.க.,வும் அப்படியே. அரசியல் அனுபவம் கொண்ட ஏனைய கட்சிகளும் வாக்கு வங்கி அரசியலை நோக்கி ஜரூராக பயணம் செய்ய ஆரம்பித்துள்ளன.
ஓட்டுகள்
இந்த தருணத்தில் விஜய் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம். அதில் முதலில் கட்சியின் அடையாளமாக தாம் மட்டுமே அறியப்படுகிறோம் என்பதை மாற்ற வேண்டும். வெறும் தமது முகமும், குரலும், அதையும் தாண்டிய போட்டோ, வீடியோக்கள் மட்டும் ஓட்டுகளை தராது என்பதை அவர் புரிந்து கொண்டால் போதும். எதிர்வினை
நடப்பு கால அரசியலில் மக்களின் மனோநிலை என்ன? ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் என்ன என்பதை உற்று கவனிக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகள், அரசின் அறிவிப்பு, திட்டங்கள் செயலாக்கம், மற்ற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு போன்றவற்றை ஆழ்ந்து கவனித்து, எதிர்வினையாற்ற வேண்டும். தமது கட்சியில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் சென்று சேரும் வகையில் தயார்படுத்த வேண்டும். கட்சியில் பல்வேறு அணிகளை அமைத்து, அவற்றை ஒருங்கிணைத்து கட்சியின் நிலைப்பாடுகளை மக்கள் மன்றத்தில் மேடைகள் மூலமாகவும், பேட்டிகள் மூலமாகவும் கொண்டு சேர்க்க வேண்டும்.
கட்டமைப்பு
அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர் வினையாற்ற, அடுத்த கட்ட தலைவர்களை தயார் செய்வது அவசியம். முதல் கட்ட தலைவர்கள், 2ம் கட்ட தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், பகுதி கிளை செயலாளர்கள் என கட்டமைப்புகள் இல்லாமல் தேர்தலை சந்திப்பது, கண்ணை கட்டி காட்டில் விட்டதற்கு சமம். கட்சியில் பல்வேறு அணிகள், அதில் உறுப்பினர்கள் சேர்க்கை, அதன் எண்ணிக்கையை உயர்த்த எடுக்க வேண்டியவை, தொண்டர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க அவ்வப்போது போராட்ட அறிவிப்புகள், கட்சியின் உயிர்த் துடிப்பான தொண்டர்களை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அறிக்கை
தமிழக அரசியல் களம் இனி தன்னை சுற்றியே நகர வேண்டும் என்பதில் திடமாக களமாட வேண்டும். பிளைட் மோட் (flight mode) என்ற அரைகுறை அரசியலை அப்படியே ஓரம் வைத்து விட்டு, எந்நேரமும் கள அரசியல் மூடில் இருப்பது பலன் தரும். கட்சியை ஆரம்பித்து, சில மாதங்கள், அறிக்கை விட்டு பின்னர் எங்கே இருக்கிறோம் தொண்டர்களே தேடும் அளவுக்கு இருந்தால் மிகவும் கடினம்.
அபிமானம்
அரசியலில் சண்டை போடுகிறோம் என்பதை விட யாருக்காக, எதற்காக சண்டை போடுகிறோம் என்பதை தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டாலே அவர்களின் அபிமானங்களை அள்ளி விடலாம். எதிரி என்று விஜய் குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் கூட, சக்சஸ் என்று சொல்லும் அளவுக்கு விக்கிரவாண்டி மாநாடு வெற்றிகரமாக நடந்தேறி விட்டது. 'முதல் தடையை மட்டுமே அவர் தாண்டியிருக்கிறார். அவர் கடந்து செல்ல வேண்டிய இமாலய இலக்கு இனிமேல் தான் இருக்கிறது' என்கின்றனர், அரசியல் கட்சியினர்.மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மக்காக இல்லாமல் கிக்காக, கெத்தாக இருந்தால் நம்மை கொத்தாக அங்கீகரிப்பார்கள் என்பதை உணர்ந்தால் போதும். கட்சியிலுள்ள வெற்றி என்ற பெயருக்கு ஏற்ப எதிர்கால அரசியல் அமையும்.