வாக்காளர் பட்டியல் திருத்தம்; நிர்வாகிகளுக்கு விஜய் சீக்ரெட் 'மெசேஜ்'
வாக்காளர் பட்டியல் திருத்தம்; நிர்வாகிகளுக்கு விஜய் சீக்ரெட் 'மெசேஜ்'
ADDED : நவ 09, 2024 11:01 AM

சென்னை: 18 வயது நிரம்பிய வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு த.வெ.க., நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார். அவரது கட்சி பற்றி தான் மற்ற அரசியல் கட்சிகள் சுற்றி சுற்றி பேசி வருகின்றன. அதே வேளையில் தமது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு என்று நடிகர் விஜய் பிரத்யேகமாக சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக தெரிகிறது.
அதுபற்றி த.வெ.க., நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்ட தகவல்கள் வருமாறு; புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும், வாக்காளர்கள் முகவரி மாறி இருந்தால் அவர்களை கண்டுபிடித்து பட்டியலில் சேர்க்க வேண்டும். பெயர் திருத்தம், சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று விஜய் கூறி இருக்கிறார்.
கட்சி ஆரம்பித்த பின்னர் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் முதல் தேர்தல். இதை சவாலாக ஏற்றுக் கொண்டு நினைத்த இடத்துக்கு வர வேண்டும். வாக்காளர்களின் பெயர்கள், முகவரி மாறி இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். அந்தந்த பூத்துகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி, 18 வயது நிரம்பியவர்களை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு த.வெ.க., நிர்வாகிகள் கூறி உள்ளனர். நடிகர் விஜய்யின் அறிவுறுத்தல்களை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்களை சேர்க்கும் பணிகளில் இறங்க ஆயத்தமாகி வருகின்றனர்.